திவ்யா, காயத்ரிக்கு 'அர்ஜுனா' * வெளியானது விருது பட்டியல்

புதுடில்லி: திவ்யா, காயத்ரி உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட உள்ளது.
சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. 2025ம் ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில், கடந்த ஆறு மாதத்துக்கு முன் 24 பேர் இடம் பெற்றிருந்தனர். ஆனால், முன் எப்போதும் இல்லாத வகையில், மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்பட்டது.
இதனால் தாமதம் ஆவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஷ்ரா தலைமையிலான குழு, 17 பேருக்கு மட்டும் அர்ஜுனா விருது வழங்கப்படுவதாக நேற்று அறிவித்தது. கடந்த 2025ல் பாரா நட்சத்திரங்கள் 17 பேர் உட்பட அதிகபட்சம் 32 பேருக்கு தரப்பட்டன.
திவ்யா அபாரம்
உலக கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் ஆன முதல் இந்திய வீராங்கனை திவ்யா, 2024 செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற அணியில் இடம் பெற்ற விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, 2023 ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற டெகாத்லான் வீரர் தேஜஸ்வின் ஷங்கர் உள்ளிட்டோர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
யாருக்கு விருது
அர்ஜுனா விருதுக்கு தேர்வான 17 பேர் விபரம்:
தேஜஸ்வின் ஷங்கர், பிரியங்கா, முகமது அஜ்மல் (தடகளம்), திவ்யா, விதித் சந்தோஷ் (செஸ்), திரீஷா, காயத்ரி (பாட்மின்டன்), நரேந்தர் (குத்துச்சண்டை), ராஜ்குமார் பால், லால்ரெம்சியாமி (ஹாக்கி), சுர்ஜீத், பூஜா (கபடி), அர்விந்த் சிங் (படகு வலித்தல்), அகில் ஷியரோன் (துப்பாக்கிசுடுதல்), ஏக்தா பயான் (பாரா தடகளம்), தனுஷ் ஸ்ரீகாந்த் (காது கேளாதோர் துப்பாக்கிசுடுதல்), ருத்ரான்க் ஷ் (பாரா துப்பாக்கிசுடுதல்).
* வாழ்நாள் சாதனையாளருக்கான அர்ஜுனா விருது, முன்னாள் கால்பந்து வீரர் அருமைநாயகத்திற்கு வழங்கப்படுகிறது.
* சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா, வாழ்நாள் சாதனையாளர் விருது தர்மேந்திர யாதவ் (குத்துச்சண்டை), விரேந்தர் குமார் (மல்யுத்தம்), சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது பர்வீர் சிங் (தடகளம்), சோட்டே லால் யாதவ் (குத்துச்சண்டை), நேஹா சவானுக்கு (துப்பாக்கிசுடுதல்) வழங்கப்படுகிறது.

'நோ' கேல் ரத்னா
விளையாட்டின் உயரிய தயான் சந்த் 'கேல் ரத்னா' விருது, கடந்த ஆண்டு 4 பேருக்கு வழங்கப்பட்டன. இம்முறை ஹாக்கி வீரர் ஹர்திக் சிங் பெயர் பரிசீலனை செய்யப்பட்டது. கடைசியில், கடந்த 2014 போல, 'கேல் ரத்னா' விருதுக்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

Advertisement