காட்டு யானைகளால் அழிவின் விளிம்பில் மலைவாழை
தாண்டிக்குடி: கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் புவிசார் குறியீடு பெற்ற மலை வாழை காட்டுயானைகள் நடமாட்டத்தால் அழிவின் விளிம்பிற்கு சென்று வருகிறது.
தாண்டிக்குடி கீழ் மலைப்பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த மலை வாழைக்கு கடந்த 2008ல் புவிசார் குறியீடு கிடைத்தது. தொடர்ந்து விவசாயிகள் மலைவாழை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். தற்போது இதற்கு முட்டுக்கட்டையாக உள்ள முடிக்கொத்து நோய், காட்டு யானைகள் நடமாட்டத்தால் விவசாயப் பரப்பு சுருங்கத் தொடங்கியது.விவசாயிகளுக்கு பெரும் தலைவலியாக இருப்பது காட்டு யானைகள் நடமாட்டம். புவிசார் குறியீடு தகுதி பெற்ற இம்மலை வாழை உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக வனத்துறையும் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் இருந்த மலைவாழை உற்பத்தி பரப்பு குறைந்து, மலைவாழை சாகுபடி அழிவின் விளிம்பில் உள்ளது. கடந்த சில மாதங்களாக தாண்டிக்குடி மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளால் நாள்தோறும் விவசாயப் பயிர்கள், மலைவாழை சேதமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனத்துறையினர் நடவடிக்கை தேவை அசோகன், விவசாயி, தாண்டிக்குடி: சில ஆண்டுகளாக காட்டு யானைகள் நடமாட்டத்தால் மலை வாழை உற்பத்தி பாதிக்க தொடங்கி உள்ளது. மலைவாழை சாகுபடியை காக்க வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் நோய் தாக்குதலை தவிர்க்கவும், சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்வு காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த திண்டுக்கல், கொடைக்கானல் வனக்கோட்டத்தினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பயிர் சேதத்திற்கு அன்றைய சந்தை மதிப்பு ஏற்றவாறு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் சூரிய மின்வேலி அமைத்து பராமரிக்க வேண்டும்.
தோட்டங்களிலும் இவ்வகையான வேலிகளுக்கு மானியம் அளிக்க வனத்துறை, தோட்டக்கலைத்துறை முன்வர வேண்டும். தரைப்பகுதியில் இருந்து இடம் பெயரும் யானைகள் வழித்தடத்தை கண்டறிந்து அகழி, தொங்கு சூரிய மின்வேலியை அமைத்து தொடர் கண்காணிப்பில் வனத்துறை ஈடுபட வேண்டும்.