பாகிஸ்தான் வந்திறங்கியதா சீன ராணுவ தளவாடங்கள்?

1

இஸ்லாமாபாத்: சீனா மற்றும் துருக்கியில் இருந்து, பாகிஸ்தானுக்கு 60 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து வந்திறங்கிய ராணுவ கனரக விமானங்களில், போர் தளவாடங்கள் எடுத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு அருகில் உள்ள நுார் கான் விமானப்படைத்தளம் மற்றும் கராச்சியில் உள்ள மஸ்ரூர் விமானப்படைத்தளம் ஆகியவற்றில், சில தினங்களுக்கு முன் சீனா மற்றும் துருக்கியின் கனரக ராணுவ விமானங்கள் அடுத்தடுத்து தரையிறங்கியதாக செய்திகள் வெளியாகின.

இந்த விமானங்களில், பாகிஸ்தானுக்கான ராணுவ தளவாடப் பொருட்கள் வந்திறங்கியிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

கடந்தாண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்கு பின், பாகிஸ்தான் - சீனா இடையேயான உறவு வலுவடைந்துள்ளது. போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் 'ட்ரோன்' அமைப்பு உள்ளிட்டவற்றுக்கு, சீனாவை தான் பாகிஸ்தான் பெரிதும் நம்பி உள்ளது.

இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில் போர் விமான மேம்பாட்டு துறையில் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்த துருக்கியும், பாகிஸ்தானும் நடவடிக்கை எடுத்தன.

மேலும், சவுதி, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையே சமீபத்தில் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில், சீனா மற்றும் துருக்கியின் கனரக ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் வந்திறங்கியிருப்பது, நம் ராணுவத்தை விழிப்படையச் செய்துள்ளது. பாகிஸ்தான், சீனா மற்றும் துருக்கி இடையேயான இந்த புதிய ராணுவ கூட்டு, நம் நாட்டுக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.

Advertisement