அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி; இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேச போக்குவரத்து கடும் பாதிப்பு

1

புதுடில்லி: அமெரிக்க-ஈரான் போர் எதிரொலியாக, இந்திய விமான நிறுவனங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதால், சர்வதேச பயணிகள் போக்குவரத்து கடுமையாக சரிந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி துவங்கிய அமெரிக்க- ஈரான் போரினால் ஏப்ரல்-ஜூன் மாத காலகட்டத்தில் உலகளாவிய சர்வதேச விமானப் போக்குவரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது வெளிநாட்டு விமான நிறுவனங்களை விட உள்நாட்டு விமான நிறுவனங்களையே கடுமையாகப் பாதித்துள்ளது.

வழக்கமாக கோடைக்காலப் பயணத்தின் உச்சக்கட்டமாகக் கருதப்படும் இந்த ஏப்ரல்-ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 1.9 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் 1.7 கோடியாக சரிவை கண்டுள்ளது. அதாவது 10.5 சதவீதம் குறைந்துள்ளது.

அதே சமயம், வெளிநாட்டு நிறுவனங்களின் சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கை 7% அதிகரித்துள்ள நிலையில், இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கை 26% சரிவைக் கண்டுள்ளது.
துபாயை தளமாக கொண்ட மாபெரும் விமான நிறுவனமான எமிரேட்ஸ் நல்ல பயன் அடைந்துள்ளது.

இந்த விமான சேவைகளை பயன்படுத்திய இந்திய விமான பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 13.8 லட்சமாக இருந்த நிலையில் தற்போது நடப்பாண்டில் 7 சதவீதம் அதிகரித்து 14.8 லட்சமாக உயர்ந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதன் தாக்கத்தால் தத்தளித்து வரும் இந்திய விமான நிறுவனங்களுக்கு, இந்த மோதல் மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் மிகப்பெரிய மையமாகத் திகழும் டில்லிக்கும், மேற்கு நாடுகளுக்கும் இடையேயான விமானச் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா குழுமத்தின் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகளின் சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 43.3 லட்சமாக இருந்த நிலையில், இந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 36% சரிந்து 27.6 லட்சமாகக் குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ஆமதாபாத்தில் நடந்த விபத்திற்குப் பிறகு, ஏர் இந்தியா தனது வெளிநாட்டு விமானச் சேவைகளைக் குறைத்து வருகிறது.

இண்டிகோவின் சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கை, 2025 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 39.5 லட்சத்திலிருந்து 15% சரிந்து 33.4 லட்சமாகக் குறைந்துள்ளது. லுப்தான்சா, ஸ்விஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட மேற்கத்திய விமான நிறுவனங்கள் தங்களின் இந்திய விமானச் சேவைகளை அதிகரித்துள்ளன.

Advertisement