வயசு வெறும் நம்பர் தான்; உலக மூத்த குடிமக்கள் தினத்தில் மனம் திறந்த மூத்த குடிமக்கள்!

5


-நமது நிருபர் குழு-


ஓய்வு என்பது பணியில் இருந்து விலகுவது மட்டுமே; வாழ்க்கையில் இருந்து அல்ல. வயது கூடக்கூட சிலரது வேகம் குறைவதில்லை. மாறாக, அனுபவம், ஆரோக்கியம், சமூக அக்கறை, குடும்பப் பாசம் என வாழ்க்கையின் அடுத்தடுத்த அத்தியாயங்களை இன்னும் அழகாக எழுதத் தொடங்குகிறார்கள்.

திருப்பூரில் 60, 70, 80 வயதைக் கடந்தும் சுறுசுறுப்பாக இயங்கும் பலர், முதுமை குறித்த பொதுவான எண்ணங்களையே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கு மருத்துவம்; இன்னொருவருக்கு தொழில்; ஒருவருக்கு விவசாயம்; மற்றொருவருக்கு சமூகப்பணி. சிலருக்கு கற்பித்தல்... இன்னும் சிலருக்கு பேரக்குழந்தைகளுடன் கழிக்கும் நேரமே புதிய வாழ்க்கை.

வயது உடலுக்கு வரலாம். எண்ணத்துக்கு வர வேண்டியதில்லை. இதை தங்கள் வாழ்க்கையால் பலரும் நிரூபிக்கிறார்கள். உலக மூத்த குடிமக்கள் தினத்தையொட்டி(ஆக. 21), திருப்பூர் பகுதி மூத்த குடிமக்கள், நம்முடன் பகிர்ந்தவை.


ஆரோக்கிய ரகசியம்




இந்த வயதிலும் துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு என் வாழ்க்கை முறையும் ஆயுர்வேதத்தின் மீதான நம்பிக்கையும்தான் காரணம். தினமும் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து, இரவு 9:00 மணிக்கு துாங்கச் செல்கிறேன். ஒன்றரை மணி நேரம் யோகாசனம் செய்வேன். யோகா செய்ய முடியாதவர்கள் நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங் என ஏதாவது ஒரு உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும்.

வெளி உணவுகளை தவிர்த்து, வீட்டில் தயாரிக்கும் சுத்தமான சைவ உணவையே சாப்பிடுகிறேன். உடலை மட்டுமல்ல, மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்ந்தால் நீண்ட ஆயுளுடன் மட்டுமல்ல, நிறைவாகவும் வாழ முடியும்- பிரகாஷ், 76, ஆயுர்வேத மருத்துவர்


வயதை மறந்து...




1987ல் சிவில் இன்ஜினியரிங் துறையில் பயணத்தைத் தொடங்கிய சுப்ரமணியன், 78 வயதிலும் தொழிலில் தொடர்ந்து இயங்கி வருகிறார். நான் வயதைப் பற்றி அதிகம் நினைப்பதில்லை. அன்றாட பணிகளில் கவனம் செலுத்துகிறேன்.

வாழ்க்கையிலோ, தொழிலிலோ பிரச்னைகள் வரும்போது, அதனால் ஏற்படக்கூடிய மோசமான நிலையை முன்கூட்டியே யோசித்து, அதை எதிர்கொள்ள மனதளவில் தயாராகிவிடுவேன்.

அப்படி தயாராக இருந்தால் எந்த பிரச்னையும் நம்மை அதிகம் பாதிக்காது. இளம் தலைமுறையினர் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முழு ஈடுபாடு, தரம், நேர்மை ஆகியவற்றுடன் உழைத்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்- சுப்ரமணியன், 78, நிறுவன தலைவர், இந்திய கட்டுனர் சங்கம், திருப்பூர் கிளை.


உழைப்பே பலம்




சிறுவயது முதலே விவசாயத்தில் ஈடுபட்டு வரும் வேலுசாமி, கடந்த 30 ஆண்டுகளாக போர்வெல் மோட்டார் பொருத்துதல், கழற்றுதல் பணியையும் செய்து வருகிறார். ''உழைப்பதற்கு வயது தடையில்லை. நல்ல எண்ணம் இருந்தால் தொடர்ந்து உழைக்கலாம். இப்போது விவசாயம், கைத்தொழில் போன்ற பணிகளுக்கு இளைஞர்கள் வரத் தயங்குகிறார்கள்.

என் மகன் பி.இ., படித்திருந்தாலும், அவரை வேறு வேலைக்கு அனுப்பாமல், விவசாயம் மற்றும் நான் செய்து வரும் தொழிலில் ஈடுபடுத்தி, வழிகாட்டி வருகிறேன். இப்போது இந்த வேலைகளை செய்ய ஆட்கள் கிடைப்பதே சிரமமாக உள்ளது- வேலுசாமி, 62, விவசாயி, அவிநாசி, கருமாபாளையம்.


திட்டமிட்ட உழைப்பு




சாதாரண ஊழியராக தொழில் பயணத்தைத் தொடங்கி, படிப்படியாக தொழிலதிபராக உயர்ந்தவர் நாகராஜன். 1976ல் ரூ.30 ஆயிரம் முதலீட்டில் தொடங்கிய தொழில், 1990களில் அகில இந்திய அளவில் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது.

சாயத்தொழில் கடுமையான நெருக்கடியை சந்தித்த காலத்தில் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, தொழில்துறைக்காக அரசிடம் இருந்து ரூ.400 கோடிக்கும் அதிகமான நிதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்தார். மூடப்பட்ட ஆலைகளை மீண்டும் இயக்கவும், பூஜ்யக் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்தவும் முக்கிய பங்காற்றினார்.

''பொதுப்பணியில் ஈடுபட்டதால் சொந்த தொழிலை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடன்களை அடைக்க சொத்துகளையும் விற்க நேர்ந்தது. ஆனால், சமுதாயத்துக்கு நல்லது செய்த மனநிறைவு இருக்கிறது.

கடின உழைப்பையும் துல்லியமான திட்டமிடலையும் மூலதனமாக வைத்துக்கொண்டால் இளைஞர்கள் சாதிக்க முடியும். அதற்கு வயது ஒருபோதும் தடையல்ல'' என்று சொல்கிறார், அனுபவப்பாடமாக- திவ்யர் நாகராஜன், 78, சாய ஆலைகள் சங்க முன்னாள் தலைவர்.


போராட்ட உணர்வு




15 வயதில் திருப்பூர் பஞ்சாலையில் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய பழனிசாமி, 65 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். ''சம்பள உயர்வு, போனஸ், பி.எப்., ஓய்வூதியம் என தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறேன். பல பொறுப்புகளில் இருந்திருக்கிறேன்.

பஞ்சாலைகள் மூடப்பட்ட காலத்திலும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளுக்காக போராடியிருக்கிறேன். இன்னைக்கும் சமூகத்தில் சுரண்டலும் ஊழலும் இருக்கும்போது, 'நமக்கு ஏன் வம்பு' என்று வீட்டில் உட்கார மனசு வரவில்லை. நீதிக்கான போராட்ட உணர்வும், தொழிலாளர்களின் நலனும்தான் என்னை இப்போதும் சளைக்காமல் இயங்க வைக்கிறது- பழனிசாமி, 82, தொழிற்சங்க நிர்வாகி.


சமூக அக்கறை




தொழில் துறையுடன் நகரின் வளர்ச்சியிலும் தொடர்ந்து பங்களித்து வருபவர் ரத்தினசாமி. நொய்யல் சீரமைப்பு, பாலங்கள், சாலைகள், மின்மயானங்கள், அரசுப்பள்ளிகள் என பல்வேறு சமூகத் திட்டங்களில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

''என் ஊரும், மக்களும், இயற்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. திருப்பூர் போன்ற நகரங்கள் வளர, இயற்கையை பாதுகாப்பதும், போக்குவரத்து நெரிசல் இல்லாத உள்கட்டமைப்பும் அவசியம். 40 ஆண்டுகளாக ரோட்டரியில் இருக்கிறேன். சமூக நலனுக்காக உழைப்பது என் கடமை. அதை தொடர்ந்து செய்வேன்- ரத்தினசாமி, 79, தலைவர், 'நிட்மா'.


புதிய தொடக்கம்




ஓய்வு குறித்து இவரது பார்வை சற்றே வித்தியாசமானது. ''ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவல்ல. நமக்காக வாழத் தொடங்கும் புதிய அத்தியாயம். 60 வயதைக் கடந்த பிறகும் பிள்ளைகளை மட்டுமே சார்ந்திருக்காமல், உடல், மனம், நிதி என மூன்றிலும் சுயசார்புடன் இருக்க வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

பிடித்த வேலைகளைச் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இளம் வயதிலிருந்தே ஓய்வுக்காலத்திற்காக சேமிப்பதும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு திட்டமிடுவதும் அவசியம். பணியில் இருந்து ஓய்வு பெறலாம்; வாழ்க்கையில் இருந்து அல்ல- மீனாட்சி சுந்தரம், 82, வேந்தர், அவிநாசிலிங்கம் பல்கலை.


இணைந்த பயணம்




ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வது என்பதற்கு இந்த மருத்துவர் தம்பதியின் வாழ்க்கை ஒரு அழகான பதில். ஜெகன்மோகன், 66, சித்தா மருத்துவராக பணியாற்றி 2018ல் ஓய்வு பெற்றவர். அவரது மனைவி சவுந்தரநாயகி, 65, நீரிழிவு சிகிச்சை நிபுணர். இருவரும் ஓய்வுக்குப் பிறகு ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேர் பயிரிட்டுள்ளனர். அடுத்ததாக பவளமல்லி சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதோடு நிற்கவில்லை. வெட்டிவேரை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி சந்தைப்படுத்தவும், கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வருமான வாய்ப்பை உருவாக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். ஓய்வுக்குப் பிறகு தங்களுக்காக மட்டும் வாழாமல், தாங்கள் அறிந்த துறையின் மூலம் மற்றவர்களுக்கும் வாய்ப்பை உருவாக்கும் இந்த தம்பதியின் பயணம், ஓய்வுக்காலத்துக்கு ஓர் ஆதர்ஷம் - டாக்டர் ஜெகன்மோகன் - டாக்டர் சவுந்தரநாயகி தம்பதி.


குடும்ப நிறைவு




20 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வேலை தேடி வந்த இந்த தம்பதி, குடும்பத்தை முன்னேற்றுவதற்காக ஓய்வின்றி உழைத்தவர்கள். தொழில் வளர்ச்சியுடன் குழந்தைகளின் படிப்பு, குடும்பப் பொறுப்புகள் என வாழ்க்கையின் பெரும்பகுதி ஓட்டத்திலேயே கழிந்தது.

இப்போது தொழிலை மகன் கவனிக்கிறார். பெற்றோராக தாங்கள் அவருக்கு துணையாக இருக்கிறார்கள். பேரன், பேத்திகளுடன் செலவிடும் நேரம்தான் வாழ்க்கையின் புதிய மகிழ்ச்சி என்கிறார்கள். ''குடும்பத்துக்காக சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பல ஆண்டுகள் ஓடினோம்.

விழாக்களுக்குக்கூட செல்ல முடியாத காலங்கள் இருந்தன. இப்போது பேரன், பேத்திகள் வந்த பிறகுதான் வாழ்க்கை முழுமை அடைந்ததாக உணர்கிறோம். அவர்கள் வந்து கட்டிப்பிடித்து மடியில் அமரும் நேரத்தில், நாள் முழுவதும் இருந்த சோர்வு மறந்துவிடுகிறது.

அவர்களிடம் இருந்து நாங்களும் நிறைய கற்றுக்கொள்கிறோம். முதுமையில் கிடைக்கும் இந்தச் சிறு சிறு சந்தோஷங்கள்தான் பெரிய பலம்'' என்கிறார்கள் மகிழ்ச்சிபொங்க- வினேஷ் பாபு - தனலட்சுமி தம்பதி, கணபதிபாளையம்.


அனுபவச் செல்வம்




பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணப்பன், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரங்கள் எழுதிப் படித்த அனுபவத்தை இன்றும் பயன்படுத்தி வருகிறார். 1910 முதல் 1925 வரையிலான காலகட்டத்தில் கைப்பட எழுதப்பட்ட பழைய ஆவணங்களைக் கூட எளிதாக வாசித்துக் காட்டுகிறார்.

''படிப்பு அதிகம் இல்லை. ஆனால், 50 ஆண்டுகளாக எழுதிப் படித்துப் பழகியதால் அந்த எழுத்துகள் எனக்கு புரியும். சிலரால் படிக்க முடியாத பழைய ஆவணங்களை நான் வாசித்துக் காட்டும்போது ஆச்சரியப்படுவார்கள். இப்போதும் பத்திரங்களைப் படித்துக் காட்டச் சொல்லி வருகிறார்கள். அனுபவம் கைகொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது- கண்ணப்பன், 76, பல்லடம்


கற்பித்தல் தொடரும்




1988ல் ஆசிரியராக பணியில் சேர்ந்த பழனிசாமி, பல்வேறு அரசுப்பள்ளிகளில் பணியாற்றி, தலைமையாசிரியராகவும், கல்வித்துறை நிர்வாகப் பொறுப்புகளிலும் இருந்தவர். 2024ல் ஓய்வு பெற்றாலும், கற்பித்தலுக்கு மட்டும் ஓய்வு கொடுக்கவில்லை.

தற்போது அறக்கட்டளைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கோவில்களில் உழவாரப்பணி, கிராமப்புற சேவைகள், யோகா, தியானம், தன்னம்பிக்கை பயிற்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார்.

அவிநாசி முத்தமிழ் மன்றம், கம்பன் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார். கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் ஓய்வு இல்லை என்பதையே இவரது ஒவ்வொரு நாளும் சொல்கிறது- பழனிசாமி, 62, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்.


சேவை தொடரும்




1971ல் காவல் துறையில் எஸ்.ஐ.,யாக சேர்ந்த மயில்சாமி, 2006ல் டி.எஸ்.பி.,யாக ஓய்வு பெற்றார். ஆனால், ஓய்வு பெற்றதும் சமூகப்பணியில் இன்னும் தீவிரமாக இயங்கத் தொடங்கினார். திருப்பூர் வடக்கு லயன்ஸ் சங்கத்தை தொடங்கி, ரத்ததானம், மருத்துவ முகாம் உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். மாணவர்களின் கல்வி, விளையாட்டுக்கு உதவுவதுடன், கருவலூர் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

மூத்த குடிமக்களுக்காக கருவலுாரில் 'லயன்ஸ் ஹேப்பி ஹோம்' அமைக்க தனது 1.30 ஏக்கர் நிலத்தையும் வழங்கியுள்ளார். பணி முடிந்தது. பொறுப்பு முடியவில்லை. இவர்களைப் போல பலரது வாழ்க்கை அதையே சொல்கிறது.

முதியோர் தினம் என்பது வயதை கொண்டாடும் நாள் மட்டுமல்ல. அனுபவத்தை மதிக்கவும், முதுமையை புதிய வாழ்க்கை அத்தியாயமாக பார்க்கவும் நினைவூட்டும் நாள். வயது என்பது நாட்காட்டியில் மாறும் எண். வாழ்க்கையின் வேகம்... நம் எண்ணத்தில்தான்- மயில்சாமி - நிர்மலா

குடும்பத்துடன்... சமூகத்துடனும்

அவிநாசியில் பல ஆண்டுகளாக பாரம்பரிய துணிக்கடை நடத்தி வரும் இந்தத் தம்பதி, அதிகாலை 4:00 மணிக்கு தொடங்கி இரவு 10:00 மணி வரை தொழிலில் இயங்கி வருகின்றனர். அதே நேரத்தில், சமூகப்பணி, கோவில் பணிகளிலும் தங்களால் முடிந்த பங்களிப்பை செய்து வருகின்றனர்.

''தொழில் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் தவறுவதில்லை. அவர்களுக்கு புதிய அனுபவங்களும், வெவ்வேறு இடங்களின் கலாசாரங்களும் தெரிய வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறோம். சமூகப்பணி, குடும்பம், நண்பர்கள் என மகிழ்ச்சியாக வாழும்போது, வயதாகிவிட்டதாகவே நினைப்பதில்லை'' என்கிறார்கள்- பாலன் - துளசிமணி, அவிநாசி

இரண்டாவது இன்னிங்ஸ்

''வயது முதிர்வும், பணி நிறைவும் முடிவல்ல. தாத்தா-பாட்டி என்ற புதிய அவதாரம் ஓர் இனிய அனுபவம். பெற்றோராக இருந்த காலத்தில் குழந்தைகளின் வளர்ப்பு, கல்வி, வேலை, திருமணம் என வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும். ஆனால், பேரன், பேத்திகளுடன் உறவாடுவது தனி மகிழ்ச்சி.

அதேபோல், நம்முடைய அனுபவத்தையும் அறிவையும் சமூகத்துக்கும், இளைய தலைமுறைக்கும் பகிர்ந்து கொள்வது நல்ல பணி. நல்ல நூல்களைப் படிப்பது, பிடித்த கருத்துகளை அடுத்த தலைமுறைக்கு பக்குவமாகக் கொண்டு சேர்ப்பது என, கிடைக்கும் வாய்ப்புகளில் செயல்படலாம்.

இப்படித்தான் எங்களது இரண்டாவது இன்னிங்ஸ் இனிமையாக செல்கிறது'' என்று கூறுகிறார்கள் மகிழ்ச்சி பொங்க- பாலகிருஷ்ணன் - சந்திரா, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், அவிநாசி

Advertisement