4 மாதத்தில் 22 பேருக்கு மரணதண்டனை: செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பால் அதிர்ச்சி!

12

முஸாபர்நகர்: உத்தர பிரதேசத்தில், கடந்த நான்கு மாதங்களில், 10 கொலை வழக்குகளை விசாரித்து, 22 பேருக்கு துாக்கு தண்டனை விதித்த செஷன்ஸ் நீதிபதி ரவிகுமார் திவாகர் விசாரிக்க இருந்த, 100 கொலை வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக பதவி வகித்து வருபவர் ரவிகுமார் திவாகர், 46. இவர், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் வீடியோ மூலம் ஆய்வு நடத்த உத்தரவிட்டு, கடந்த 2022ல் பலரின் கவனத்தை ஈர்த்தார்.

கடந்த 2009ல் அஸம்கரில் கூடுதல் சிவில் நீதிபதியாக பணியை தொடங்கிய ரவிகுமார் திவாகர், 2015ல் சுல்தான்பூர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2025ல் முஸாபர்நகரில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக பணி அமர்த்தப்பட்டார்.

இந்த நீதிமன்றத்தில், கடந்த நான்கு மாதங்களில் 10 கொலை வழக்குகளை விசாரித்த ரவிகுமார், 22 பேருக்கு அதிரடியாக துாக்கு தண்டனை விதித்தார். இதனால், சட்ட நிபுணர்களும், தண்டனை பெற்றவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பல்வேறு கொலை வழக்குகளில் அவர் அளித்த அதிகபட்ச தண்டனை, நாடு முழுதும் பேசு பொருளானது. இந்நிலையில், அவர் விசாரிக்கவிருந்த 100 கொலை வழக்குகள், மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி வீரேந்திர குமார் சிங் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரமோத் தியாகி கூறுகையில், ''விரைவு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 100 கொலை வழக்குகளும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெறக் கூடியவை.

''நீதிபதி ரவிகுமார் திவாகர் தொடர்ச்சியாக மரண தண்டனை வழங்கி வருவதால், வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் இடையே அச்ச உணர்வு எழுந்துள்ளது,'' என்றார்.

Advertisement