மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி., திட்டம்: இயக்குநர் காமகோடி தகவல்

3

புதுடில்லி: சென்னை ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், இன்ஜினியர்கள் மட்டுமின்றி வருங்காலத்தில் டாக்டர்களையும் உருவாக்கப் போகிறது. அதற்காக எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி., மருத்துவ படிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பொறியியல் துறையில் வல்லுநர்களை உருவாக்குவதில் முத்திரை பதித்து வருகிறது.

அதே போன்று, மருத்துவ துறையில் தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கும் வகையில் கடந்த 2023ல் நாட்டின் முதல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையை சென்னை ஐ.ஐ.டி., தொடங்கியது. இது மருத்துவ கருவிகள் மற்றும் செயலிகளை வடிவமைக்கும் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் நான்கு ஆண்டுகள் கொண்ட பட்டப் படிப்பாகும்.

அதன் தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை உருவாக்கும் வகையில் எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி., பட்டப் படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி., திட்ட மிட்டுள்ளது.

இது குறித்து சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி நேற்று கூறியதாவது:
சென்னை ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு மருத்துவ பட்டப் படிப்புகளை வழங்க விரும்புகிறது. இது எங்கள் நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனமும் மருத்துவ படிப்புகளை தொடங்க வேண்டும். இல்லையெனில், சர்வதேச மருத்துவ சந்தையின் தேவைகளை நம் தேசத்தால் பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடும்.

உயர்தர மருத்துவ உபகரணங்களுக்கு வெளிநாட்டையே நாம் இன்றும் சார்ந்து இருக்கிறோம். நம் நாட்டிலேயே சொந்தமாக மருத்துவ கருவிகளை வடிவமைக்க, டாக்டர்களும், இன்ஜினியர்களும் ஒரே கூரையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

பொறியியல் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப கருவிகளுக்கான ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் சென்னை ஐ.ஐ.டி., அடுத்த தலைமுறையை டாக்டராகவும், இன்ஜினியராகவும் ஒரே நேரத்தில் உருவாக்க தயாராகி வருவது தேசத்தின் உயர்கல்வித் துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Advertisement