பாமாயில் கழிவு லோடு லாரியில் புகை உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பாமாயில் கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரியில் புகை வந்ததால் பரபரப்பு நிலவியது.

முசிறி அடுத்த காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 30; டிரைவர். இவர், ஆந்திரா மாநிலம், ராஜா முந்திரியிலிருந்து 2 டன் பாமாயில் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கோயம்புத்துார் நோக்கி லாரியை ஓட்டிச் சென்றார்.

நேற்று காலை 6:00 மணியளவில் உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே டீ குடிப்பதற்காக லாரியை நிறுத்தினார்.

அப்போது லாரியின் மேல் பகுதியில் புகை வந்ததால் அதிர்ச்சியடைந்த விஜயகுமார், உடன் லாரியை தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்றார். உளுந்துார்பேட்டை காவல் நிலையம் அருகே வந்தபோது தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலையத்தினர், லாரியில் இருந்த 120க்கும் மேற்பட்ட கழிவு மூட்டைகளை இறக்கி புகை வந்த பகுதியில் தண்ணீர் பீச்சியடித்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், தீ விபத்து ஏற்படாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement