ஆதரவற்ற மகளிர் நலனுக்கு இணையதளம் உறுப்பினராக சேர்ந்து பயன்பெற அழைப்பு

நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் மதுபாலன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை களைந்து, அவர்கள் வாழ்வாதாரத்திற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு, 'கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம்', 2022 செப்., 2ல் உருவாக்கப்பட்டது.

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற நலவாரியத்திற்கென தனியே இணையதள பக்கம் https://www.tnwidowwelfareboard.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள பக்கத்தில் அரசு மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற நலவாரியத்திற்கென, தமிழகத்தின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள், தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடம் இருந்து எளிய முறையில் பெற தங்களது விபரங்களை இணையதள முகவரியில் பதிவு செய்து உறுப்பினராகலாம்.
மேலும், உறுப்பினராக பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்குமிடம், திறன்வளர்ப்பு பயிற்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள் மற்றும் சுயதொழில் செய்ய மானியம், 50,000 ரூபாய் போன்ற பிற உதவிகள் எளிதாக பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement