சட்டசபைக்குள் கறுப்பு டி - ஷர்ட் அணிந்து வர முயற்சி; எதிர்க்கட்சியினரை வாசலில் நிறுத்திய பாதுகாவலர்கள்

பெங்களூரு: அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, சட்டசபைக்குள் கறுப்பு டி - ஷர்ட் அணிந்து வர முயன்ற எதிர்க்கட்சியினரை, விதான் சவுதா பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய கோரி, விதான் சவுதா வளாகத்தில் உள்ள வால்மீகி சிலை முன், பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள் இணைந்து, கறுப்பு டி - ஷர்ட் அணிந்து நேற்று போராட்டம் நடத்தினர். பின், விதான் சவுதா வளாகத்திற்குள் அரசு, நாகேந்திராவுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி வந்தனர்.

இந்நிலையில், சட்ட சபை மதியம் 12:00 மணிக்கு துவங்கிய போது, உறுப்பினர்களுக்கு 'அலெர்ட்' கொடுக்கும் மணி ஒலிக்கப்பட்டது. கறுப்பு டி - ஷர்ட் அணிந்து போராட்டம் நடத்திய, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேராக சட்டசபைக்கு வந்தனர். நுழைவுவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட, விதான் சவுதா பாதுகாவலர்கள், கறுப்பு டி - ஷர்ட் அணிந்து உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை, வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

'என்ன அராஜகம் செய்கிறீர்களா' என்று, பாதுகாவலர்களை நோக்கி, எம்.எல்.ஏ., பிரபு சவுஹான் ஆவேசமாக கத்தினார். பாதுகாவலர்களை தள்ளி விட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளே நுழைந்தனர்.

இதுபற்றி அறிந்த சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீல், கறுப்பு டி - ஷர்ட் அணிந்து சட்டசபைக்குள் வர அனுமதி இல்லை என்று எதிர்க்கட்சியினரிடம் கூறினார். இதனால் டி - ஷர்ட்டை கழற்றி வைத்துவிட்டு வந்து, போராட்டம் நடத்தினர்.

அறிவிப்பு கொடுங்கள் இதற்கிடையில், நாகேந்திரா ராஜினாமா விவகாரம் குறித்து, மேல்சபையில் முதல்வர் சிவகுமார் பேசுகையில், ''நாகேந்திரா எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை, எதிர்க்கட்சியினர் விளக்கமாக கூற வேண்டும். எந்த அறிவிப்பும் கொடுக்காமல் நேராக வந்து போராட்டம் நடத்துவது சரியல்ல. உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை அவையின் முன்பு வையுங்கள்.

''அதுபற்றி 2 நாட்கள் விவாதம் நடத்துவோம். நாகேந்திராவை ஏன் அமைச்சரவையில் சேர்த்தேன் என்று நான் பதில் அளிக்கிறேன். அதையும் ஏற்று கொள்ளவில்லை என்றால், வரும் நாட்களில் அடுத்தகட்ட பேச்சு நடத்துவோம். இந்த விஷயத்தில் தேவையின்றி ராகுலை இழுப்பது சரியல்ல,'' என்றார்.

சட்டசபை, மேல்சபையை சரியாக நடத்த விடாமல், எதிர்க்கட்சியினர் தொந்தரவு செய்வதாக கூறி, விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது .

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சியினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் நேற்று விதான் சவுதா வளாகமே போராட்ட களமாக மாறியது.

Advertisement