தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை: எம்.எல்.ஏ., மீது மக்கள் அதிருப்தி

மாண்டியா: அரசு மருத்துவமனை அறையை, நாடக கலைஞர்களின் 'மேக்கப்' அறையாக பயன்படுத்த வாய்ப்பளித்த, எம்.எல்.ஏ.,வின் செயல் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் பன்டி சித்தேகவுடா. இவரது தா ய்க்கு நேற்று முன் தினம், பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் பங்கேற்க வந்த நடிகைகள் மேக்கப் செய்து கொள்ள, ஸ்ரீரங்கப்பட்டணா அரசு மருத்துவமனையின் அறைகளை பயன்படுத்த எம்.எல். ஏ., வாய்ப்பளித்தார்.

நடிகையர் மருத்துவமனை வளாகம் மற்றும் அறைகளில், அநாகரிகமாக நடனமாடி வீடியோ எடுத்தனர். இவர்களால் நோயாளிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டது. இந்த வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. எம்.எல்.ஏ.,வின் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.

ஸ்ரீரங்கப்பட்டணா அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக நுாற்றுக்கணக்கான ஏழை நோயாளிகள் வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகளே இல்லை. இதற்கு தீர்வு காண, ஆர்வம் காட்டாத எம்.எல்.ஏ., ரமேஷ் பன்டிசித்தேகவுடா, தன் தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சிக்காக, அரசு மருத்துவமனையை பயன்படுத்தியது, மக்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

Advertisement