வர்த்தக ஒப்பந்தப் பேச்சு தோல்வி; கனடா பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: வர்த்தக ஒப்பந்தப் பேச்சு தோல்வியில் முடிந்தது; கனடா பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை அதிபர் டிரம்ப் விதித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். தற்போது இரு தரப்புக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சு தோல்வியடைந்ததை அடுத்து, கனடா பொருட்கள் மீது அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இது குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறியதாவது:
இந்த வாரத் தொடக்கத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளின்படி வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய கனடா மறுத்துவிட்டது. எஃகு மற்றும் அலுமினியம் போன்ற துறைகளுக்கான வரிகளை குறைப்பதாக அமெரிக்கா அளித்த சலுகைகளை மீறி, கனடா அதனை நிராகரித்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
நாங்களும் பதிலுக்கு வரி விதிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார். இது குறித்து மார்க் கார்னி கூறியதாவது: அமெரிக்கா முன்மொழிந்த நிபந்தனைகளில் கடைசி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் நியாயமற்றவை; எந்தவொரு ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. வரும் நாட்களில் கனடா தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு கூடுதல் ஆதரவை தனது அரசு வழங்கும்.
நாடு தனது ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்த வேண்டும்; தற்போது கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். இவ்வாறு மார்க் கார்னி கூறினார்.
வாகனங்கள், எஃகு மற்றும் அலுமினியம் மீதான அமெரிக்காவின் வரிகளிலிருந்து கனடா நிவாரணம் கோரி வருகிறது. இந்த வரிகள் அதன் பொருளாதாரத்தில் சுமையை ஏற்படுத்தி, வேலை இழப்புகளுக்கு வழிவகுத்து, அமெரிக்காவுடன் ஒரு காலத்தில் வலுவாக இருந்த அதன் வர்த்தக உறவைச் சீர்குலைத்துள்ளன.