மக்கள்தொகை கணக்கெடுப்பாளர் வரவில்லை எனில் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், கணக்கெடுப்பாளர் தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றால், கட்டுப்பாட்டு அறையை 044 - -2723 7107 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என, கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி, கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாவட்டம் முழுதும் இப்பணியில் 1,736 கணக்கெடுப்பாளர்கள், 275 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று, வீடு தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

கணக்கெடுப்பு பணியாளர்கள் வீடுகளுக்கு வரும்போது, கேட்கப்படும் அனைத்து விபரங்களையும் பொதுமக்கள் முழுமையாக தெரிவித்து, கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

முதற்கட்ட வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி வரும் ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனால், விடுபட்ட வீடுகள் எதுவும் இல்லாத வகையில் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தங்களது பகுதியில் கணக்கெடுப்பு பணியாளர் வரவில்லை எனில், பொதுமக்கள் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 044- - 2723 7107 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement