சேவைக்குக் கிடைத்த மகுடம்  

கல்லுாரியில் படிக்கும்போதே சமூக சேவையில் கால் பதித்தவர், உடுமலையைச் சேர்ந்த இம்மானுவேல் நெல்சன், 30. மலைவாழ் மக்களுடன் ஏற்பட்ட நெருக்கமான தொடர்பு, அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி, இலவச மருத்துவ முகாம்கள், மலைவாழ் மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் என சமூகப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி, வனப்பகுதிகளில் இருந்து இதுவரை 820 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளார்.

மலைவாழ் பெண்களுக்கான சுய உதவிக் குழுக்கள் உருவாக்க உதவுதல், குழந்தைத் திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். சமூகப் பணி துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ள இவர், ‘எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை’ மூலம் தனது பணிகளை தொடர்ந்து வருகிறார்.

அவரது சமூக சேவையை பாராட்டி, தமிழக அரசு, 2026ம் ஆண்டுக்கான மாநில இளைஞர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. சான்றிதழ், பதக்கத்துடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

இம்மானுவேல் நெல்சன் கூறியதாவது:

கல்லுாரி காலத்திலேயே சமூகப் பணியில் ஈடுபடத் தொடங்கினேன். உடுமலையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகளையும், சிரமங்களையும் நேரில் பார்த்தபோது, இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

மக்கள் நல்வாழ்வு, கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். துாய்மை இந்தியா இயக்கம், வாக்காளர் விழிப்புணர்வு, தேசிய மாணவர் படை செயல்பாடுகள் போன்றவற்றிலும் பங்கேற்று, இளைஞர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறேன்.

தமிழக அரசின் மாநில இளைஞர் விருது, சும்மா கிடைத்த அங்கீகாரம் அல்ல. பல ஆண்டுகளாக மேற்கொண்ட சமூகப் பணிக்கு கிடைத்த கவுரவம். இந்த விருது, இன்னும் அதிக மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது.

Advertisement