வெர்ல்பூல் கம்பெனியில் அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ., மீது வழக்கு அதற்கு போட்டியாக எம்.எல்.ஏ., புகார்

திருபுவனை: வெர்ல்பூல் கம்பெனியில் அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ., மீது போலீசார் வழக்குப் பதிந்த நிலையில், அதற்கு போட்டியாக எம்.எல்.ஏ., பி.ஆர்.செல் போலீசில் புகார் அளித்தார்.

திருபுவனை தொழிற்பேட்டையில் வெர்ல்பூல் இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், தொகுதி எம்.எல்.ஏ., சாய் சரவணன் குமார், தனது ஆதரவாளர்களுக்கு நேற்று முன்தினம் கம்பெனியில் ஆய்வு செய்ய சென்றார்.

அப்போது, பணியில் இருந்த ஊழியர்கள், எம்.எல்.ஏ.,வை  தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. அதனை மீறி எம்.எல்.ஏ., தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி கம்பெனிக்குள் சென்று, மேலாளர் மற்றும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கம்பெனி மேலாளர் சிவராமக்கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., மற்றும் ஆதரவாளர்கள் மீது அத்துமீறி நுழைதல், பாதுகாப்பு அதிகாரிகளை திட்டிதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கம்பெனிக்கு ஆய்வுக்கு சென்றபோது, கம்பெனி மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டதாக சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., பி.சி.ஆர். செல் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.

அதில், வெர்ல்பூல் கம்பெனியின் அரசு பொது இடங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக கம்பெனிக்கு ஆய்வு செய்ய நேற்று முன்தினம் சென்றேன். அப்போது கம்பெனியின் மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், என்னை உள்ளே வரக்கூடாது என, தடுத்தனர். அதற்கு, என்னுடன் வந்த ஆதரவாளர்கள் ஒரு எம்.எல்.ஏ., கம்பெனி உள்ளே வரக்கூடாதா என்று கேள்வி எழுப்பினர்.

பின், என்னை உட்பட 4 பேரை மட்டும் உள்ளே வர அனுமதி அளித்து, எம்.எல்.ஏ.,வான தன்னை கம்பெனியின் நுழைவு வாயிலில் அறையில் அமர வைத்து பேசி, வாக்குவாதத்தில்  ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பி.சி.ஆர்., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement