டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பில் முடிவு



ஊட்டி: -

பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம், 28-ம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.



கோரிக்கைகள்

நீலகிரி மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஊட்டியில் வேலை நிறுத்த ஆயுத்த மாநாடு சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஆல்துரை தலைமை வகித்தார். தொ.மு.ச., மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் விஜயராஜ், தொ.மு.ச .,மாவட்ட தலைவர் கணேசன், சி.ஐ.டி.யு .,மாவட்ட தலைவர் மகேஷ், சம்மேளன குழு உறுப்பினர் நவீன் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., டாஸ்மாக் சங்க மாநில துணை பொது செயலாளர் ஜான் அந்தோணி ராதாகிருஷ்ணன் பேசினார்.



கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது, ‘ 23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தில் மாற்று திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.



வன விலங்குகள் தாக்குதல், பொது போக்குவரத்து வசதி குறைவு காரணமாக இரவு கடைப்பணி 8:00 மணிக்குள் முடிக்க வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் மலைப்படி மற்றும் குளிர்காலப்படி வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம், 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.’ இவ்வாறு, அவர்கள் கூறினர்.



Advertisement