6 கிலோ கஞ்சா பறிமுதல் ; 4 பேர் கைது 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, நெகமம் ஆனைமலை பகுதிகளில் மொத்தம், ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பொள்ளாச்சி மேற்கு போலீசார், பெருமாள் செட்டி வீதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரசண்டகுமார் சாகு, 34, என்பதும், கடந்த, ஆறு ஆண்டுகளாக கோட்டூர் துறையூரில் தங்கி மட்டை மில்லில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், விற்பனைக்காக ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* ஆனைமலை வெப்பரை ரோடு ஆழியாறு ஆறு பாலத்தின் அருகே ரோந்து சென்றனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, அங்கு சந்தேகப்படும் படி நின்ற நபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில்,  செஞ்சேரிபுதுாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு,23, குடிமங்கலம் மட்டை மில்லில் பணியாற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த நஷ்ருதீன் புர்கத்,24, என்பவரிடம் சிறு பாக்கெட்டுகளில் கஞ்சாவை 500 ரூபாய்க்கு வாங்கி, 600 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

அதன்பின், இருவரும் ஆனைமலை பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்து இருந்த, 1 கிலோ, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* நெகமம், சிறுகளந்தை தனியார் தேங்காய் உலர்களத்தில் தங்கியுள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜெயிலேஷ்வர் சவுபால், 35, கட்டட வேலை செய்து வருகிறார். இவர், கஞ்சா விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சிறுகளந்தை பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்த ஜெயிலேஷ்வர் சவுபாலிடம் போலீசார் விசாரித்தனர். இதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து, அவர் தங்கியிருந்த அறையில் சோதனை செய்தபோது, 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement