அரசு பள்ளியில் பல்லி கிடந்த உணவு விநியோகம்; மயக்கமடைந்த 19 மாணவ - மாணவியர் 'அட்மிட்' ; பதறி ஓடிய பெற்றோர்; திணறிப்போன ஆசிரியர்கள்
பூந்தமல்லி: பூந்தமல்லி அரசு பள்ளிகளில், காலை உணவு திட்டத்தில், பல்லி இறந்து கிடந்த பொங்கல் சாப்பிட்ட மாணவர்களில், 19 பேர் உடல் சோர்வு மற்றும் மயக்கம் அடைந்ததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இரு மாணவர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தகவலறிந்த பெற்றோர் பதறியடித்து பள்ளிக்கு ஓடி, ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பள்ளியில் பயிலும் தொடக்க நிலை மாணவ - மாணவியரின் பசியை தீர்க்கவும், ஊட்டச்சத்தை உயர்த்தவும், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொங்கல், உப்புமா, கிச்சடி உள்ளிட்ட உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள ஹிந்து ஆரம்ப அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று காலை, வழக்கம்போல் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பொங்கல், காய்கறி சாம்பாருடன் வழங்கப்பட்ட உணவை மாணவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, பல்லி இறந்து கிடப்பதை, உணவு பரிமாறுபவர் பார்த்துள்ளார்.
உடனே, மாணவர்கள் சாப்பிடுவதை ஆசிரியர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தினர். மற்ற மாணவர்களுக்கு உணவு வழங்குவதையும் தவிர்த்தனர்.
எனினும், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 11 மாணவ - மாணவியருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. பதறிய ஆசிரியர்கள், மாணவர்களை மீட்டு, பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தனர்.
இதற்கிடையே, உணவில் பள்ளி விழுந்தது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கும், மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் தகவல் அளித்தனர். அங்கெல்லாம் காலை உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது.
எனினும், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் பின்புறம் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஏழு பேர்; பூந்தமல்லி கீழ்மா நகர் அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவி காலை உணவை சாப்பிட்டதால் மயங்கியது தெரிந்தது. அவர்களும், பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மொத்தமுள்ள 19 மாணவர்களில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் உடல் நலம் அதிகம் பாதிக்கப்பட்டதால், உயர் சிகிச்சைக்காக, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டனர்.
மாணவர்கள் பாதித்துள்ளதாக தகவல் பரவியதால், பீதியடைந்த பெற்றோர், அந்தந்த பள்ளிகளுக்கு படையெடுத்தனர். ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், மருத்துவமனைக்கு பதறியடித்து அவசரமாக ஓடினர்.
உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு, ஒரே இடத்தில் இருந்து உணவு வழங்கப்பட்டு உள்ளது.
அதுவும் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மாங்காடில் உள்ள உணவுக்கூடத்தில் சமைத்து, குன்றத்துார், மாங்காடு, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், 23 தொடக்கப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டதும் தெரிந்தது.
தகவலறிந்த பொது சுகாதார துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மாங்காடு உணவு கூடத்திற்கு சென்றனர். அங்கிருந்த உணவு மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், திருவள்ளூர் கலெக்டர் கவிதா, பூந்தமல்லி த.வெ.க., - எம்.எல்.ஏ., பிரகாசம் ஆகியோர், உணவு கூடத்திற்கும், பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அவர்களிடம், 'இனி இதுபோன்ற குறைபாடுகள் நடக்காத வகையில், உணவு தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் உயிரோடு விளையாடக்கூடாது' என, பெற்றோர் வலியுறுத்தினர்.
அந்தந்த பள்ளிகளில் காலை உணவு பல்லி இறந்து கிடந்த உணவு சாப்பிட்ட 19 மாணவர்கள், மருத்துவமனையில் உள்ளனர். இதில் இருவர் மட்டும், வயிற்று வலி காரணமக மேல் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு காலை இளநீர் வழங்கப்பட்டது; மதியம் தயிர் சாதம் தரப்பட்டது. மாணவர்களை, மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். உணவு தயாரித்த கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
அதில் குறைபாடு இருப்பது தெரியவந்தால், உணவு தயாரித்தவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, அந்தந்த பள்ளிகளில் காலை உணவு சமைப்பது குறித்து, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். - கவிதாகலெக்டர், திருவள்ளூர்.
அந்தந்த பள்ளிகளிலேயே உணவை தயாரித்து மாணவர்களுக்கு வழங்கவேண்டும். இவ்வாறு செய்தால் பெருமளவில் நடக்கும் ஊழலையும், விபரீதங்களையும் தடுக்க முடியும்.