அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா ஏற்புக்கு எதிரான வழக்கு வாபஸ்!

3

சென்னை: அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்று, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து, அதை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் ஆறு பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர். இதை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில், வழக்கறிஞர்கள் வாதம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், 6 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், 'ஒரே விவகாரத்துக்காக அடுத்தடுத்து ஏன் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன' என கேள்வி எழுப்பியதுடன், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக எச்சரித்தனர்.

அதையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement