காப்பீடு அட்டை பெற தாமதத்தால் நோயாளிகள்  தவிப்பு: அவசர கால அறுவை சிகிச்சை பெற முடியாமல் காத்திருப்பு

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தகுதியான குடும்பங்களுக்கு மருத்துவமனையில் சேர்க்கை, சிகிச்சை செலவுகளை பணமில்லாமல் வழங்கும் நோக்கத்துடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் பெற முடியும். காப்பீட்டு அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் சிரமம் இன்றி சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து அட்டை பெற விண்ணப்பிப்பவர்களுக்கு நடைமுறை முடிந்து அடையாள அட்டை கிடைக்க 40 நாட்கள் வரை ஆகிறது. இதனால் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவிக்கின்றனர். டாக்டர் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியிருந்தாலும், காப்பீட்டு அட்டை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. உடனடியாக சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.

காத்திருக்கும் நோயாளிகள் தேனியில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் பொது அறுவை சிகிச்சை, விபத்தில் கால் எலும்பு முறிவு போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு புதிதாக காப்பீடு அட்டைக்கு விண்ணப்பித்த 60க்கும் மேற்பட்டோர் அட்டை கிடைக்காமல் அறுவை சிகிச்சை தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

இதுபற்றி தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டபோது, 'அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு தாமதம் இன்றி உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நோயாளிகள் காப்பீடு செய்யாமல் இருக்கின்றனர். குறிப்பாக திருமணமானவர்கள் புதிய ரேஷன் அட்டை பெறும்போது தனியாக காப்பீடு கேட்டு விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது,' என்றனர். காப்பீட்டுத் திட்டம் தொடர்பான சந்தேகங்கள், புகார்களுக்கு கட்டணமில்லா அலைபேசி எண் 1800 425 3993 ஐ தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மாவட்ட சுகாதார துறையினர் கூறுகையில், 'கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதல்வரின் மருத்துவ காப்பீட்டுப் பதிவு மையத்திற்கு ரேஷன்கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள், புகைப்படங்களுடன் நேரில் சென்று விண்ணப்பித்து இ- அட்டையை பெறலாம்,' என்றனர்.

Advertisement