ஊர்வசி தியேட்டர் இடிக்கும் பணி துவக்கம் ரஜினி, கமல் படங்களின் ரசிகர்கள் வருத்தம்

பெங்களூரு: திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஊர்வசி திரையரங்கை இடிக்கும் பணிகள், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று துவங்கின.

பெங்களூரின் லால்பாக் சாலையில் உள்ள, 'ஊர்வசி' திரையரங்கு, மிகவும் பிரபலமானது. கடந்த 1970ம் ஆண்டில், சீனிவாஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம், இந்த இடத்தை பாஷெட்டி டிரஸ்டிடம் இருந்து 45 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெற்றது. இங்கு ஊர்வசி என்ற பெயரில், திரையரங்கு கட்டியது. 1970ல் நடிகர் ராஜ்குமார், இந்த திரையரங்கை திறந்து வைத்தார்.

இந்த திரையரங்கு 1,100 இருக்கைகள் கொண்டதாகும். கன்னடம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி, பாலிவுட் படங்கள் என 5,000க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் இருக்கும் 4கே டிஜிடல் புரொஜக்டர், சிறப்பு சவுண்ட் சிஸ்டம் உட்பட நவீன தொழில்நுட்பங்கள் இருந்தன .

குறைந்த கட்டணம் இந்த திரையரங்கில், ரஜினி நடித்த கபாலி , சிவாஜி , கமல் நடித்த இந்தியன் உட்பட பல்வேறு த மிழ் படங்கள், அமெரிக்கா அமெரிக்கா, ஏகே 47, பாகுபலி, காந்தாரா, கே.ஜி.எப்., என சூப்பர்ஹிட் படங்களும் திரையிடப்பட்டன. மல்டி பிளக்ஸ்களின் கட்டணத்தை விட, குறைவான கட்டணத்தில் திரைப்படங்களை பார்க்க முடிந்ததால், சினி ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருந்தது.

ரஜினி, கமல் போன்ற தமிழ் ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியானால், ஊர்வசி திரையரங்கின் சுற்றுப்பகுதி திருவிழா போன்று காட்சியளிக்கும். பிரமாண்ட கட் அவுட், ஊர்வலம் நடத்தி அமர்க்களப்படுத்துவர். இங்கு திரையிடப்பட்ட படங்கள், ஹிட்டானதால் பல நடிகர், நடிகையர்களும், இந்த திரையரங்கை அதிர்ஷ்டமானதாக கருதினர்.

பெங்களூரில் மல்ட்டிபிளக்ஸ் கலாசாரம் துவங்கிய பின், 'சிங்கிள் ஸ்க்ரீன்' திரையரங்குகளுக்கு மவுசு குறைந்தது. இதனால், பெரும்பாலும் தமிழ் படங்கள் திரையிடப்பட்ட பிரபல திரையரங்குகள் இடிக்கப்பட்டன. இந்த வரிசையில் ஊர்வசியும் சேர்ந்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு திரையரங்கு உள்ள இடத்தின் ஒப்பந்தம், 2018 ஏப்ரலில் முடிந்தது. இடத்தை விட்டுத்தரும்படி, உரிமையாளர் வலியுறுத்தினார். ஆனால் திரையரங்கு உரிமையாளர் விட்டுத்தரவில்லை. இந்த விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் சென்றது. 2025 அக்டோபர் 13ம் தேதிக்குள் திரையரங்கை ஒப்படைக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து, கேள்வி எழுப்பி திரையரங்கு நிர்வாகத்தினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். கடந்த ஜனவரி 30ம் தேதி, உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. திரையரங்கை ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் காலி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனால், நடப்பாண்டு ஆரம்பத்தில், லேண்ட் லார்டு திரைப்படம் திரையிட்ட பின், சில மாதங்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால், மார்ச் மாதம், துரந்தர், தி ரிவெஞ்ச் திரையிடப்பட்டது. நேற்று முன்தினம் வரை, மலையாளத்தின், பெத்லஹம் குடும்ப யூனிட் திரைப்படம் ஓடியது. யஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் டாக்சிக் திரைப்படம், திரையிடப்பட இருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திரையரங்கை காலி செய்யும் பணிகள் நேற்று துவங்கின.

முதற்கட்டமாக திரையரங்கு இருக்கைகள் அகற்றப்பட்டு உள்ளன. திரையரங்கு கட்டடத்தை இடிப்பதற்காக இயந்திரங்கள் வந்துள்ளன. பெங்களூரின் மற்றொரு பிரபலமான திரையரங்கு மூடப்படுவதால், மூத்த சினிமா ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Advertisement