யானை தாக்கி மூதாட்டி படுகாயம்; மக்களை விரட்டுவதால் இரவு 7:00 மணிக்கு கடைகள் அடைப்பு

குன்னுார்: குன்னுார் பர்லியார் பகுதியில் யானை தாக்கி மூதாட்டி படுகாயமடைந்தார்.

குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள பர்லியார் பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் ஏராளமான பணியாளர்கள் பணி புரிகின்றனர். இங்கு முகாமில் உள்ள ஒற்றை யானை மாலை மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்புகள் பகுதிக்கு வந்து தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை இப்பகுதியை சேர்ந்த டெய்சி,61, என்பவர் ஆலயத்திற்கு செல்ல வெளியே வந்த போது, திடீரென அங்கு வந்த யானை தாக்கியதால் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் சப்தமிட்டதால் யானை அங்கிருந்து சென்றது.

மக்கள் கூறுகையில்,'பகல் நேரத்தில், வனப்பகுதிகளில் தஞ்சமடையும் இந்த யானை மாலை மற்றும் இரவு நேரங்களில் சாலையில் வந்து குடியிருப்புகளை தாக்கி சேதப்படுத்துகிறது. இதனால் இரவு, 7:00 மணிக்குள் அனைவரும் கடைகளை அடைத்து செல்கின்றனர்.

சில சமயங்களில் கடைகளை சேதப்படுத்தி அங்குள்ள பழங்களை உட்கொள்ளாமல் சென்று விடுகிறது. தற்போது மக்களையும் தாக்க துவங்கியுள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி, யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.

Advertisement