உயர்மட்ட பாலம் பணிகள் தாமதம் கிராம மக்கள் அவதி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடி செல்லும் ரோட்டில் கட்டப்படும் பாலம் பணிகள் தாமதமாவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவில் இருந்து, பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக கோதவாடி செல்லும் ரோட்டில், கடந்த, 2025ம் ஆண்டில் உயர்மட்ட பாலம் அமைக்க, 3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கப்பட்டது.

கோடங்கிபாளையம், கோதவாடி கிராமங்களுக்கு செல்லும் ரோட்டில் தனியார் நிறுவனங்கள் இருப்பதால் இந்த ரோட்டில் தினமும் நுாற்றுக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.

வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி, சிரமம் இல்லாமல் பயணிக்க, உயர்மட்ட பாலம் பணிகள் மேற்கொள்ளும் இடத்தின் அருகில், தற்காலிக ரோடு அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் தற்காலிக பாதை முழுவதும் மூடப்பட்டது.

கிராமப்புற பகுதிகள் மற்றும் நிறுவனங்களுக்கு செல்பவர்கள், மாற்றுப்பாதையில் சுற்றுச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மக்கள் கூறியதாவது:

இந்த ரோட்டில் பல மாதங்களாக பாலம் கட்டும் பணி நடக்கிறது. தற்போது இப்பணிகள் மந்தமாக நடப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவசர காலத்திற்கு மருத்துவமனை செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் விரைவாக நடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன், கட்டுமான பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் சற்று தாமதம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு திறக்கப்படும்,’ என்றார்.

Advertisement