சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை முக்கிய இடங்களில் தேவை
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சர்வீஸ் ரோட்டின் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன், சர்வீஸ் ரோடு சீரமைப்பு பணிகள் நடந்தது.
இதில், கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் அருகே மட்டும் சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கோதவாடி பிரிவு, சிங்காரம்பாளையம் பிரிவு, அரசம்பாளையம் பிரிவு போன்ற இடங்களில் வேகத்தடைகள் இல்லாததால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் விரைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மக்கள் கூறியதாவது:
சர்வீஸ் ரோடு சீரமைப்பதற்கு முன், பல இடங்களில் வாகன விபத்தை தவிர்க்க வேகத்தடை இருந்தது. ஆனால் ரோடு சீரமைப்புக்கு பின் பெரும்பாலான இடங்களில் வேகத்தடை இல்லை.
குறிப்பாக, கோதவாடி பிரிவில் சர்வீஸ் ரோடு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோடு இணையும் பகுதியில் ரோட்டோரம் அதிக அளவில் கனரக வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது.
இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இங்கு வேகத்தடை இல்லாதது வாகன ஓட்டுநர்களுடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.