வீணாகிறது புதிய இணைப்பில் குடிநீர் வெளியேறி குழாயில் நீர் கசிவை தடுப்பது எப்போது

திருப்புத்துார்,ஆக.26-

திருப்புத்துார் நகரில் குடிநீர் திட்டத்தில் எதிர்காலத் தேவைக்காக நீட்டிக்கப்பட்டுள்ள புதிய இணைப்புகளுக்கான குழாய்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை தடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.

திருப்புத்துார் பேரூராட்சியில் மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ 23.847 கோடியில் குடிநீர் விஸ்தரிப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் திருப்புத்துாரில் கூடுதலாக மூன்று மேல்நிலைத் தொட்டி, இரண்டு தரை மட்டத் தொட்டி, நகரைச் சுற்றி பத்து ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் செல்லும் வகையில் புதிய விநியோக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரம் இலக்கு வைத்து தற்போது 4600 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.  எதிர்காலத்தில் 6 ஆயிரம் இணைப்பு வரை தர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தம்பிபட்டி சிலம்பக்கோன் ஊருணி, புதுப்பட்டி மருதாண்டி ஊருணி புனரமைப்பு, கணேஷ்நகர் பூங்கா மேம்பாடும் இத்திட்டத்தின் கீழ் நடந்தது.

ஓராண்டில் நிறைவேற்றப்பட வேண்டிய இத்திட்டம் 2 ஆண்டுகளாக மிகவும் தாமதமாகவே நடந்தது. தற்போது இத்திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. தொடர்ந்து திட்டப் பராமரிப்பு பணிகளும் நடந்து வருகிறது. புதிய திட்டம் வந்தும் நகர் முழுவதும் முழுமையாக குடிநீர் விநியோகம் சீராக நடைபெறவில்லை. நகரில் பல இடங்களில் விநியோகக் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவால்  ‛குடிநீர் வரவில்லை’ என்ற மக்களின் புகார் தொடர்கிறது. தகுதியான குழாய் பதிப்பு  பணியாளர்கள் இல்லாததாலும் பல இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் அழுத்தத்தை தாங்கும் திறனில்லாத குழாய் வால்வுகளாலும் குடிநீர் கசிந்து விநியோகம் பதிக்கப்பட்டுள்ளது. மக்கள் புகார்களின் அடிப்படையிலேயே தற்போது அப்பகுதிகளில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

பல இடங்களில் புதிய குடிநீர் இணைப்பிற்கான குழாய்கள் பதிக்கப்பட்டாலும், அதற்கான குழாய்கள் வீடுகளில் இணைக்கப்டாமல் உள்ளது. வீட்டிற்கு முன்பாகவே தெருக்களில் அந்த குடிநீர் இணைப்புக் குழாய்கள் அடைப்பானால் மூடப்பட்டு காணப்படுகிறது. இது போன்று பல நுாறு இணைப்புகள் தரப்பட்டும் குடிநீர் விநியோகத்திற்காக திருகு, மீட்டர் மானிகள் இணைக்கப்படாமல் பயனின்றி தெருக்களில் உள்ளன. இவற்றின் மூடிகள் கழன்ற நிலையில் குடிநீர் கசிவு ஏற்பட்டு பல இடங்களில் வீணாவதும் தொடர்கிறது.

அம்ரூத் திட்ட பொறியாளர் கூறுகையில்,‛ திட்டத்தில் பெரும்பாலான குழாய்களில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் வராத வீடுகளுக்கு உள்ள இணைப்புகளில் பராமரிப்பு பணி நடந்த வருகிறது. தற்போது தினசரி 18 லட்சம் லிட்டர் அளவில் குடிநீர் விநியோகிக்க முடியும். பழைய திட்டத்தில் 2 நாட்களுக்கு ஒரு முறையும், விஸ்தரிப்பு திட்டத்தில் தினசரி குடிநீர் விநியோகம் செய்ய முடியும். மேலும், ரோடு புதுப்பிக்கும் பணி முடிந்து விட்டால் புதிய இணைப்புகள் தருவதில் சிரமம் ஏற்படும் என்பதால், லைன் வீடுகள், தொகுப்பு வீடுகள் உள்ள இடங்களில் தேவையான குடிநீர் இணைப்புகளுக்கான குழாய்கள் பதிப்பு முடிந்துள்ளது. அந்த குழாய்கள் வெளியே நீட்டிக்கப்பட்ட மூடிகள் மூலம் மூடப்பட்டுள்ளது. அதில் மூடிகள் கழன்று நீர்க்கசிவு ஏற்பட்டால் பூமியில் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.6 மாதங்களில் இத்திட்டம் பராமரிப்ப பணிகள் நிறைவடைந்து பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்படும் ’ என்றார்.

Advertisement