மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நெருக்கடி  மன உளைச்சலால் ஆசிரியர்கள் அவதி

பொள்ளாச்சி: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு, பொறுப்பு அலுவலர்கள் நெருக்கடி கொடுப்பதால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 

பொள்ளாச்சியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் ஆசிரியர்கள்  ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில், பொறுப்பு அலுவலர்கள் நெருக்கடி கொடுப்பதால் மன உளைச்சல் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு (டிட்டோஜாக்) நிர்வாகிகள் கூறியதாவது:

மக்கள் தொகை, வீடுகள் கணக்கெடுப்பு பணியில், பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள சக துறை அலுவலர்களான ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை அதிகாரிகளை கூட கலந்தாலோசிக்கவில்லை. கல்வித்துறை அலுவலர்களுக்கே தெரியாமல் நேரடியாக ஆசிரியர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி பயிற்சிக்கு வரவழைத்து தாமதமாக பணி ஆணை வழங்கியது.

பணிப்பகுதிகளை ஊராட்சியின் மக்கள் தொகை, வீடுகளின் எண்ணிக்கையை கொண்டு அந்தந்த பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முறையாக பங்கீடும் செய்து அளிக்காமல், பெரும்பாலான ஆசிரியர்களுக்கு, 500 வீடுகளுக்கு மேலாக வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளை வழங்கி, மிகுந்த பணிச்சுமையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றனர். சில ஆசிரியர்களுக்கு இரண்டுக்கும்  மேற்பட்ட ஊராட்சிகள் ஒரு கணக்கெடுப்பு பகுதியில் வருமாறு, எந்த ஒரு முறையான திட்டமிடலும் இன்றி கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது.

இத்தனை குறைபாடுகளையும் ஏற்று, ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும், 30ம் தேதி வரை காலக்கெடு உள்ள போது, கூடுதல் வீடுகள் ஒதுக்கப்பட்ட சில ஆசிரியர்கள் இன்னும் பணியை முடிக்க முடியாமல் திணறுகின்றனர். அவர்களுக்கு உதவியாக கூடுதல் பணியாளர்களை நியமிக்காமல் கணக்கெடுப்பு பணியை முடித்ததாக செயலியில் பதிவேற்றம் செய்ய நிர்பந்தப்படுத்துகின்றனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அலுவலர்கள் நெருக்கடி, நிர்பந்தம் குறித்து மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement