தென்மேற்கு பருவமழை தீவிரம் மேல்நீராறில் 101 மி.மீ., பதிவு
வால்பாறை: பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேல்நீராறு அணைப்பகுதியில், 101 மி.மீ., மழை பெய்துள்ளது.
வால்பாறையில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வால்பாறையில் பருவமழை தீவிரமாக பெய்கிறது. இடைவிடாமல் பெய்யும் கனமழையால் , அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீரவரத்து அதிகரித்து வருவதோடு, அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
வால்பாறையில் மழை தீவிரமடைந்துள்ளதால், இங்குள்ள ஆறு மற்றும் அருவிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை தீவீரமடைந்துள்ள நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 99.45 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,908 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,620 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனால் பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 42.60 அடியாக உயர்ந்தது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):
சோலையாறு – 68, பரம்பிக்குளம் – 38, ஆழியாறு – 21, வால்பாறை – 67, மேல்நீராறு – 101, கீழ்நீராறு – 70, மேல்ஆழியாறு – 5, சர்க்கார்பதி – 35, துாணக்கடவு – 34, பெருவாரிப்பள்ளம் – 26, நவமலை – 11, பொள்ளாச்சி – 21 என்ற அளவில் மழை பெய்தது.