ரோடு வசதி இன்றி மழைநீர் தேங்கி சகதிகாடாக மாறும் அவலம் தேனி நகராட்சி சிவாஜி நகர் விரிவாக்க பகுதி மக்கள் அவதி
தேனி:தேனி சிவாஜிநகர் விரிவாக்க பகுதியில் தெருவிளக்கு, ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி குடியிருப்போர் சிரமம் அடைகின்றனர். தேனி அல்லிநகரம் நகராட்சி 21வது வார்டில் சிவாஜிநகர், சிவாஜிநகர் விரிவாக்க பகுதிகள் அமைந்துள்ளன. வால் கரட்டை ஒட்டி அமைந்துள்ள இப் பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி சிரமம் அடைந்து வருவதாக சிவாஜி நகர் விரிவாக்கப் பகுதி குடியிருப்போர் குமுறுகின்றனர். தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதிக்காக குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் ராஜேஷ் சுப்பிரமணி, சோனைமுத்து, ஜெயபால், கணேசன், ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் கூறியதாதவது: இப்பகுதியில் 20 ஆண்டுகளாக குடியிருப்புகள் உள்ளது. 200 குடும்பங்களை சேர்ந்த 700க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். இப் பகுதிக்கு உரிய பாதை ஆக்கிரமிப்பால் சுருங்கி உள்ளது. இதனை அகற்ற பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் அகற்ற ஆர்வம் காட்டுவதில்லை. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் இப்பகுதிக்கு வர முடியவதில்லை.
பாதை மூடியதால் சுற்றி செல்வதில் சிரமம் இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. தெருக்களில் மின் கம்பங்கள் மட்டும் உள்ளன. தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவில் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. வால்கரட்டை ஒட்டிய பகுதி என்பதால் விஷபூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் மாலையில் பள்ளி முடிந்து திரும்பும் மாணவர்கள், வேலைமுடிந்து திரும்பும் பெண்கள் அச்சத்துடன் தெருவில் நடக்க வேண்டியுள்ளது. சிமென்ட்ரோடு, தார்ரோடு அமைக்காததால் மழைகாலத்தில் ரோடு சகதிகாடாக மாறிவிடும். இதனை கடந்து செல்லும் பலர் தடுமாறி, வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். கரட்டுப்பகுதியில் இரவில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் வனத்துறையினர் இப்பகுதியில் இருந்து பாதையை மூடிவிட்டனர். இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. நகராட்சி அதிகாரிகள் வால்கரட்டு பகுதியில் மேற்கு பகுதியில் உள்ள 10 அடிபாதை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரி வசூலிக்கும் நகராட்சி வசதி செய்யவில்லை: நகராட்சி குடிநீர் வினியோகத்திற்கு குழாய்கள் இல்லை. இதனால் போர்வெல் தண்ணீரை பருகுகிறோம். சிலர் பணம் செலுத்தி கேன்களில் குடிநீர் வாங்கி பயன்படுத்துகிறோம். சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளுக்கு முன் பள்ளம் தோண்டியும், ரோட்டிலும் கழிவு நீர் விடும் அவல நிலை உள்ளது. நகராட்சியில் சொத்துவரி, குப்பை வரி வசூலிக்கின்றனர். இதுவரை இப்பகுதிக்கு குப்பை சேகரிக்க வண்டி வந்ததில்லை. இதனால் பல பகுதிகளில் குப்பை மேடாக காட்சியளிக்கின்றன. பாதாள சாக்கடை அமைக்க சில மாதங்களுக்கு முன் பணியை துவங்கினர். தற்போது அந்த பணியையும் கிடப்பில் போட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் செய்து தர கோரி நகராட்சி, கலெக்டர் அலுவலகங்களில் பல முறை மனு வழங்கினாலும் நடவடிக்கை இல்லை. இப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.