பதவி வேண்டி கோவில்களுக்கு படையெடுக்கும் உடன்பிறப்புகள்
தமிழகத்தில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தோல்வியை தழுவிய தி.மு.க., அதற்கான காரணங்களை ஆராய்ந்தது. அதில், கிடைத்த தகவலின் பேரிலும், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றவும் கட்சியில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக, கட்சி பதவிகளில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு கொடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் இரண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் (அல்லது) ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு மூன்று மாவட்ட செயலாளர் என நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, முன்னாள் சீனியர் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அதையும் மீறி, கட்சி தலைவர் ஸ்டாலின், புதியதாக நியமிக்கப்பட உள்ள மாவட்ட செயலாளர்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் தற்போது, இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். இரு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என பிரிக்கப்பட்டால், இன்னும்இரண்டு பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு மூன்று மாவட்ட செயலாளர்கள் என்றால், இன்னும்மூன்று பேருக்கு வாய்ப்பு கிடைக்கம்.
இதனால், மாவட்ட செயலாளர் பதவி கிடைக்க வேண்டி, மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கோவில், கோவிலாக படையெடுத்து வருகின்றனர்.