வங்கி கடன் பெற்று ரூ.21 கோடி மோசடி தம்பதியுடன், வங்கி மேலாளரும் கைது
சென்னை, ஆக. 26-–
நிதி நிறுவனத்தில் பெற்ற அடமான கடனை, போலி ரசீது மூலம் ரத்து செய்ததுடன், அசல் ஆவணங்களை வேறு வங்கியில் அடமானம் வைத்து, 21 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அண்ணாநகர் தம்பதி, நிதி நிறுவன கிளை மேலாளர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கிண்டியில் உள்ள, ‘ரெப்கோ ஹோம் பைனான்ஸ்’ நிறுவனத்தில் சட்ட உதவி மேலாளராக பணிபுரியும் விஜயகுமார், சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்:
எங்கள் நிறுவனத்தில், 2016ம் ஆண்டில், அண்ணாநகரைச் சேர்ந்த சசிகலா, 43, அவரது கணவர் தேவேந்திரன், 51, ஆகியோர், எட்டு வீடுகளின் அசல் ஆவணங்களை அடமானம் வைத்து, மூன்ற கோடி ரூபாய் கடன் பெற்றனர்.
தவணை செலுத்தி வந்த நிலையில், 2026ல் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அந்த அசல் பத்திரங்கள் காணாமல் போனது தெரியவந்தது.
மேலும், 2.26 கோடி ரூபாய் கடன் நிலுவையில் இருந்த நிலையில், அண்ணாநகர் கிளை மேலாளர் ஹரிநாத் கார்த்திக், 51, போலி ரசீது தயாரித்து கடனை ரத்து செய்ததும் தெரியவந்தது.
அசல் ஆவணங்களை மற்றொரு தனியார் வங்கியில் அடமானம் வைத்து, 21 கோடி ரூபாய் கடன் பெற்று நிறுவனத்தை ஏமாற்றி உள்ளனர். எனவே, மோசடியில் ஈடுபட்ட மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரித்தனர். சசிகலா- – தேவேந்திரன் தம்பதி, ‘சவுமியா பிராப்பர்டிஸ்’ என்ற பெயரில், ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் நவநீதனிடம், தொழிலை விரிவுபடுத்துவதாக கூறி, அவரது சொத்து ஆவணங்களை பெற்றுள்ளனர்.
பின், அவற்றை ரெப்கோ நிறுவனத்தில் அடமானம் வைத்து கடன் பெற்று, நவநீதனுக்கு சேர வேண்டிய தொகையை வழங்காமல் ஏமாற்றி உள்ளனர்.
மேலும், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வரும் பரத்பலாரிடம், மூன்று கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தேவேந்திரன், சசிகலா, ஹரிநாத் கார்த்திக் ஆகிய மூவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
***
மேலும்
-
மத்திய அமைச்சர் கட்கரி அரசியலில் இருந்து ஓய்வு?
-
அமெரிக்க ராணுவ தளங்கள் வரை சென்று தாக்கும் தனித்துவ ஆயுதங்களை உருவாக்கியுள்ளது சீனா
-
இந்தியா - ஜி.சி.சி., நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சு தீவிரம்
-
'மூலப்பொருட்கள் விலை உயர்வால் டயர் நிறுவனங்கள் லாபம் சரிவு'
-
டி.ஆர்.டி.ஓ., ஏவுகணை தொழில்நுட்பங்கள் உள்நாட்டு நிறுவனங்கள் பெறலாம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி
-
உலக அளவில் 1.40 லட்சம் பேரை பணி நீக்கும் போக்ஸ்வேகன்