காரைக்கால் தொழிலதிபரிடம் ரூ. 1.2 லட்சம் ‘அபேஸ்’

காரைக்கால்: காரைக்காலில் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக போலி குறுஞ்செய்தி செய்தி அனுப்பி தொழிலதிபரிடம் 1.2 லட்சம் ரூபாயை அபகரித்த சைபர் கிரைம் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, காரைக்கால் எம்.எம்.ஜி., நகரை சேர்ந்தவர் மோகனசுந்தரம், 44; தொழிலதிபர். இவருக்கு புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு உள்ளது. அந்த வங்கி கணக்கு மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 18ம் தேதி மோகன சுந்தரம் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், கே.ஒய்.சி., புதுப்பிக்கப்படாததால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கணக்கை மீண்டும் செயல்படுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆப்பை பதிவிறக்கம் செய்து நிறுவுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஆப்பை அவர் பதிவிறக்கம் செய்தபோது, அவருக்கு அடுத்தடுத்து ஓ.டி.பி., வந்ததால் சந்தேகமடைந்த மோகன சுந்தரம், தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை பாதுகாக்கும் நோக்கில் தனது உறவினரின் வங்கி கணக்கிற்கு அவசரமாக 98 ஆயிரத்தை ஜி.பே மூலம் மாற்றியுள்ளார்.

இதற்கிடையே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து இரண்டாயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். இதுகுறித்து மோகன சுந்தரம் கடந்த 19ம் தேதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement