சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்!: சபாநாயகர் அறிவுரை
சென்னை: பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து, எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரம், சட்டசபையில் நேற்று அனலை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடந்த விவாதத்தின் போது, அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அமளி ஏற்பட்டதால், சபாநாயகர் பிரபாகர் கோபமடைந்தார். ''சபையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்; இல்லையேல், கடும் நடவடிக்கை எடுப்பேன்,'' என, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின், முதல் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. கடந்த 17ம் தேதி முதல், துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன.
விவாதம் நடக்கும் போது, அமைச்சர்களுக்கும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இரு தரப்பினரும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று, நேருக்கு நேர் கைகளை நீட்டி, கோஷமிட்டு வருகின்றனர். இதனால், எந்த துறை குறித்து விவாதம் நடக்கிறதோ, அதுபற்றி பேசப்படாமல், சபை நடவடிக்கைகள் வேறு திசைக்கு செல்கின்றன. இதுபற்றி சபாநாயகர் அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்தார்.
சட்டசபையில் நேற்று, பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து, எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா, என்.எல்.சி., நிலம் எடுப்பு பிரச்னை குறித்து, தி.மு.க.,வினர் பேசும் போதும், முஸ்லிம் சமுதாயம் பற்றி த.வெ.க., - மதார் பத்ருதீன் பேசும் போதும், கடும் அமளி ஏற்பட்டது.
அப்போது நடந்த விவாதம்:
தி.மு.க., - ஆஸ்டின்: ஆறு எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததால், அந்த சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இதனால், தொகுதி மக்களின் குரல், சட்டசபையில் முடக்கப்பட்டுள்ளது. நல்லது செய்வர் என்று ஓட்டளித்த மக்களின் நம்பிக்கை பொய்த்து விட்டது. ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ., பதவி என்பது மிகப்பெரிய அந்தஸ்து. பதவி ஏற்ற ஒரு மாதத்தில் ராஜினாமா செய்துள்ளதால், அதை விட பெரிய ஆதாயம் கிடைத்தால் தான் அவ்வாறு செய்வர்.
சபாநாயகர் பிரபாகர்: இந்த விவகாரம் நீதி மன்றத்தில் இருப்பதால், அதன் உள்ளே போகாமல், மானியக் கோரிக்கை பற்றி பேசுங்கள்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: தொகுதி பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே, மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை, முதல்வர் நியமித்துள்ளார். முதல்வர் நேரடி கண்காணிப்பில் தொகுதிகள் உள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: எல்லா ஆட்சியிலும், பொறுப்பு அமைச்சர்கள் நியமிப்பது வழக்கமானது. ஒரு கூட்டத்தொடரில் கூட பங்கேற்காமல், எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தது குறித்தே ஆஸ்டின் கேட்கிறார். குற்றம் சொல்லவில்லை. அதை மக்கள் முடிவிற்கே விட்டு விடுகிறோம்.
அமைச்சர் செங்கோட்டையன்: மாவட்ட அமைச்சர்கள் தொகுதிகளுக்கு சென்று, மக்களை சந்தித்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அ.தி.மு.க., - பழனிசாமி: மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் ஒரு நாள் போவார்; பரிசீலனை செய்வார். எம்.எல்.ஏ.,வால் மட்டுமே தினமும் தொகுதி பிரச்னைகளை அறிந்து கொள்ள முடியும். எனவே, தொகுதிகளுக்கு எம்.எல்.ஏ., தேவை. விவாதம் திசை மாறி போகிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது.
அமைச்சர் செங்கோட்டையன்: விரைவில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எங்கள் ஆர்வம்; அதில் நாங்கள் வெற்றி பெறுவோம். குதிரை பேரம் என்றெல்லாம் பேசினர். எடப்பாடி தொகுதியில், த.வெ.க., வேட்பாளர் அருண் வாபஸ் பெற்றார். அவரை கட்சியில் சேர்த்துள்ளீர்கள். இது குதிரை பேரம் இல்லையா?.
பழனிசாமி: அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது; வாபஸ் வாங்கவில்லை. அவர் முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திடீரென்று ராஜினாமா கடிதம் கொடுக்கின்றனர். பரிசீலனையில் இருக்கும் போது, வேறு கட்சியில் சேருகின்றனர்.
சபாநாயகர் பிரபாகர்: நீதிமன்றத்தில் உள்ள விஷயம் குறித்து, இங்கு பேசக்கூடாது. நீதிமன்றத்தில் வழக்கு இல்லையென்றால், நான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச அனுமதிப்பேன். இது, பொதுக்கூட்ட மேடை கிடையாது. ஒருவர் பேசும் போது, மற்றவர்கள் எழுந்து நிற்கக்கூடாது.
சபைக்கு உரிய மாண்பை காப்பாற்ற வேண்டும். சபை விதியை நான் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தை உருவாக்காதீர்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள்; உணர்வுப்பூர்வமாக பேசுங்கள்; வேகமாக பேசி உங்கள் உடலை வருத்திக் கொள்ளக்கூடாது. அமைதியாக சொல்லுங்கள் என, முதல் நாளில் இருந்தே பழனிசாமிக்கு சொல்கிறேன்.
ஒரு கட்சியில் இருந்து வெற்றி பெற வேண்டும் என்றால், 6,000 பேர் உழைக்க வேண்டும். திடீரென்று கட்சி மாறுவதால் தலைமைக்கு ஏற்படும் இழப்பு; வருத்தம் குறித்து பழனிசாமி ஏற்கனவே பேசினார். அது சபைக்குறிப்பில் இருக்கிறது. அதை நான் முழுமையாக படித்து பார்த்தேன்.
ஆஸ்டின் பேசியதால், தேவையில்லாத விவாதம் வருகிறது. அமைச்சர் செங்கோட்டையன் பேசுவதை தவிர்த்து இருக்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது, அந்த பிரச்னை குறித்து இங்கு பேசுவதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் தொடர்பான விவாதத்தின் போது, வீட்டுவசதித்துறை அமைச்சர் ராஜ்குமார் பேசியபோது, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் மற்றவர்களுக்கு வாய்ப்பு கேட்டு கூச்சலிட்டனர். சிலர் சத்தம் போட்டு விட்டு குனிந்து கொண்டனர்.
அப்போது, சபாநாயகர் பிரபாகர் பேசியதாவது: சட்டசபையில் உறுப்பினர்கள் சிலர் ஆவேசமாக நடந்து கொள்கின்றனர். அவர்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. தன் இருக்கையை விட்டு எழுந்து முன்னேறி ஓடி வருகின்றனர்; கைகளை உயர்த்தியபடி மிரட்டுகிற வகையில் செயல்படுகின்றனர். இவ்வாறான செயல்களை நிச்சயமாக இங்கே அனுமதிக்க முடியாது. இனி இதுபோன்று நடந்து கொண்டால், நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். இது அறிவுரையாக இல்லை; எச்சரிக்கையாக சொல்கிறேன். இவ்வாறு அவர் எச்சரித்தார்.
மேலும்
-
மத்திய அமைச்சர் கட்கரி அரசியலில் இருந்து ஓய்வு?
-
அமெரிக்க ராணுவ தளங்கள் வரை சென்று தாக்கும் தனித்துவ ஆயுதங்களை உருவாக்கியுள்ளது சீனா
-
இந்தியா - ஜி.சி.சி., நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சு தீவிரம்
-
'மூலப்பொருட்கள் விலை உயர்வால் டயர் நிறுவனங்கள் லாபம் சரிவு'
-
டி.ஆர்.டி.ஓ., ஏவுகணை தொழில்நுட்பங்கள் உள்நாட்டு நிறுவனங்கள் பெறலாம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி
-
உலக அளவில் 1.40 லட்சம் பேரை பணி நீக்கும் போக்ஸ்வேகன்