பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து: முதல்வர் அறிவிப்பின் பின்னணி என்ன?

- நமது சிறப்பு நிருபர் -

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட, அவரது ஆலோசகர்களே காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தலைமை செயலக வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த தி.மு.க., ஆட்சியில், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை, 2025ல் த.வெ.க., தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதனால், விஜய் முதல்வரானதும், பரந்துார் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்ற தகவல் வெளியானது. அதேநேரம், 'பரந்துார் விமான நிலைய திட்டத்தை திரும்பப் பெறுவது, மாற்றுவது அல்லது கைவிடுவது தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து எந்தவித கோரிக்கையோ, கடிதமோ வரவில்லை' என, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, 'பரந்துார் விமான நிலைய திட்டம் தொடர்பாக, தற்போதைக்கு எந்த முடிவையும் அறிவிக்க வேண்டாம். 'திட்டத்தை கைவிடுவதாக இருந்தால், மாற்று இடத்தை தேர்வு செய்த பின் அறிவிக்கலாம்' என, முதல்வர் விஜய் தரப்பிடம், உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம், 'பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என, விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

'இது, காலியாக உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், இடைத்தேர்தல் நடக்கும் போது, பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த, பரந்துார் விமான நிலைய திட்டத்தை கைவிடும் முடிவை அறிவிக்க வேண்டும்' என, முதல்வர் தரப்புக்கு, அவரின் ஆலோசகர்கள் யோசனை கூறியுள்ளனர்.

'முதல்வரே ஒரு முக்கிய வளர்ச்சி திட்டத்தின் அறிவிப்பை கைவிடுவதாக அறிவித்தால், அது முதலீட்டாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும்; அரசாணை மட்டும் வெளியிட்டு விடலாம்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பரந்துாருக்கு நேரில் சென்று போராடியவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததால், அந்த திட்டத்தை கைவிடும் முடிவை, முதல்வரே வெளியிட வேண்டும்; இது தான், எதிர்கால அரசியலுக்கு அடித்தளம் என, முதல்வரின் ஆலோசகர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று, முதல்வர் அந்த அறிவிப்பை வெளியிட்டார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement