கட்டி முடித்தும் பூட்டியே கிடக்கும் அறிவுசார் மையம் திறக்கப்படுமா?: செஞ்சியில் மாணவர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

செஞ்சி: செஞ்சியில் ரூ.1.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையம், கட்டுமான பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு தயாராக இருப்பதால் உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த, 2024 ம் ஆண்டு தமிழக அரசு நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செஞ்சி உட்பட, 13 பேரூராட்சிகளில் ரூ.20.44 கோடி மதிப்பில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தது. இதன் படி 2025ம் ஆண்டு செஞ்சி -மேல்களவாய் சாலையில் ரூ.1.60 கோடி ரூபாய் மதிப்பில், வாசிப்பு அறை, நுாலகம், கணினி, இணைய வசதி, ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் அறிவு சார் மையம் கட்டுவதற்கு அப்போதைய எம்.எல்.ஏ., மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

இந்த கட்டட பணிகள் 2 மாதம் முன்பு நிறைவடைந்து தயார் நிலைக்கு வந்தது. மின் இணைப்பும் வழங்கி விட்டனர். கட்டடத்தின் உள்கட்டமைப்பு உபகரணங்கள் வராமல் கட்டடத்தை திறக்காமல் வைத்துள்ளனர்.

மாணவர்கள் காத்திருப்பு கிராமப்புறங்கள் நிறைந்த செஞ்சியில் டி.என்.பி.எஸ்.சி., வங்கி பணிகள், யு.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் குறைவாக உள்ளன.

ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் வெளியூர்களுக்கு சென்று தங்குவதற்கும், பயிற்சி மையங்களில் கட்டணம் செலுத்தி படிக்கவும், வசதி இல்லாமல் உள்ளனர்.

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அமைதியான படிப்பிடம், நுால்கள், கணினி மற்றும் இணைய வசதி, அரசு தேர்வுகள் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட வசதிகள் கிடைக்க வேண்டிய நிலையில், அதற்காக கட்டப்பட்ட கட்டடமே பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

நாளிதழ்கள் அறிவுசார் மையத்தை திறந்து வைப்பதுடன் அதிகாரிகளின் பணி முடிந்து விடக்கூடாது. மாணவர்கள் தினமும் பயன்படுத்தும் வகையில் போதுமான புத்தகங்கள், நாளிதழ்கள், நடப்பு ஆண்டிற்கான போட்டித் தேர்வு புத்தகங்கள் கிடைக்கவும், மையத்தில் நிறுவப்படும் கணினிகள், இணையதள வசதி சரிவர செயல்படவும், மின்சாரம், குடிநீர் தடையின்றி கிடைக்கவும், கழிப்பறையை சுத்தமாக பராமறிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்று சூழல் அறிவுசார் மையத்தின் பின்புறத்தில் சாலை ஓரம் இறைச்சிக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதில் இருந்து வரும் துர்நாற்றம் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. எனவே அறிவுசார் மையத்தை சுற்றிலும் சுகாதாரமான சூழலை உருவாக்குவது அவசியம்.

கட்டி முடிக்கப்பட்டுள்ள அறிவுசார் மைய கட்டடத்தில் இதுவரை கேட் அமைக்காமல் உள்ளனர். திறந்த வெளிபோல் இருப்பதால் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறவும், பொருட்களை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

விரைவாக திறக்க கோரிக்கை கோடிக்கணக்கில் அரசு நிதியை செலவு செய்து கட்டிய கட்டடத்தை, மாணவர்கள் முறையாக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கட்டடம் நீண்ட நாள் பூட்டிக் கிடப்பதைவிட, மாணவர்களின் பயன்பாட்டுக்கு உடனடியாக திறக்க வேண்டும் என மாணவர்களும், கல்வியாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் காலதாமதமின்றி அறிவு சார் மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

Advertisement