விளையாட்டு அரங்கம் கட்டுமான பணி முடிவது எப்போது? தேத்தாம்பட்டு கிராம இளைஞர்கள் எதிர்பார்ப்பு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு கிராமத்தில் மந்தமாக நடைபெற்று வரும் சிறு விளையாட்டு அரங்கம் கட்டுமான பணியை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கிராமப்புற இளைஞர்கள் தங்களது விளையாட்டு திறனை மேம்படுத்த வசதியாக ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு ஊராட்சியில் சிறு விளையாட்டு அரங்கம் கட்ட கடந்த ஆட்சியில் தமிழக அரசு ரூ.2.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் நிதி என மொத்தம் ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதில், சிறு விளையாட்டு அரங்கத்தில்நிர்வாக அலுவலகம், பார்வையாளர்கள் மாடம், ஓட்டப்பந்தய மைதானம், கைப்பந்து, கால் பந்து, கூடைப்பந்து, கபடி, கோகோ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்டவிளையாட்டுகளுக்கு தேவையான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் இதற்கான பூமி பூஜை போடப்பட்டு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டுமான பணிகள் துவங்கியது. அதன் பின்னர் சட்டசபை தேர்தல் காரணமாக கட்டுமான பணி தொய்வாக நடைபெற்று வருகிறது.
இதனால், பணி துவங்கிய 6 மாதத்தில் ம் நிர்வாக அலுவலகம் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கிராவல் ஜல்லி சரளைக்கற்கள் நிரம்பியுள்ள வீரர்கள் விளையாடுமிடம் சரி செய்தல் மற்றும்மீதமுள்ள பணிகள் துவங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இப்பணியை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரரை தொடர்புகொண்டதில் குறிப்பிட்ட காலக்கெடு படி பணிகள் நடந்து வருவதாகவும், கட்டிடங்களின் உறுதி தன்மைக்குரிய உரிய நேரம்ஒதுக்குவதால் அதற்குரிய காலம் மட்டுமே கடந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இன்னும் 6 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடையும் என்றார்.
எனினும், கட்டுமான பணிகளை விரைந்து முடித்து கிராமப்புற விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டு திறன் மேம்படுவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வசதியாக சிறு விளையாட்டு அரங்கத்தினை விரைவில் திறக்க வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.