வாகன ஓட்டிகளிடம் வசூலித்த ரூ.6 கோடியை வட்டிக்கு விட்டு கல்லா கட்டிய மாநகர போலீசார்

15

சென்னை: சென்னையில் விதிமீறல் என்று வாகன ஓட்டிகளிடம் அபராதமாக வசூலித்த, ஆறு கோடி ரூபாயை கருவூலத்தில் செலுத்தாமல், போலீசார் வட்டிக்கு விட்டு கல்லா கட்டியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தில்லாலங்கடியை கண்டறிந்த சென்னை போலீஸ் கமிஷனர், நிலுவைத் தொகையை செலுத்தும் வரை, வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்க, 10 காவல் நிலையங்களுக்கு தடை விதித்துள்ளார். சென்னையில் விதிமீறல் வாகனங்களுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். பல இடங்களில் கூட்டாக நின்று, விரட்டிப் பிடிக்காத குறையாக, போலீசார் அபராதம் விதித்து, வசூல் நடத்தி வருகின்றனர்.

சென்னை மாநகர எல்லையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, 55 காவல் நிலையங்கள் உள்ளன. விதிமீறல் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படும் தொகை, நடமாடும் நீதிமன்றங்கள், அரசின் கருவூலங்களில் முறையாக செலுத்தப்பட வேண்டும்.

ஆனால், பல காவல் நிலையங்களில் போலீசார் வசூலித்த அபராத தொகையை செலுத்தாமல், கமுக்கமாக வைத்து, சொந்த உபயோகத்திற்கும், வட்டிக்கும் விட்டு கூடுதலாக கல்லா கட்டி வந்தது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், விதிமீறிய வாகனங்கள் மீதான நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தபோது, 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் போலீசார் வசூலித்த அபராத தொகை, முறையாக செலுத்தி வரவு வைக்காதது தெரிய வந்துள்ளது.

தொடர் விசாரணையில், ஆறு கோடி ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்படாமல் இருப்பது அம்பலமாகியுள்ளது. இதில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் நிலைய எழுத்தர்கள் கூட்டு சேர்ந்து, இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட பரங்கிமலை, மீனம்பாக்கம், விமான நிலையம், மடிப்பாக்கம், மதுரவாயல், மாதவரம் உள்ளிட்ட, 10 காவல் நிலையங்களில் உள்ள யாரும், நிலுவை தொகையை செலுத்தும் வரை, வழக்குகள் ஏதும் பதிவு செய்யக்கூடாது என, போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து, உதவி ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:
சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக கபில்குமார் சரட்கர் பணியாற்றியபோது, ஒவ்வொரு மாதமும் விதிகளை மீறியது தொடர்பாக போடப்பட்ட வழக்குகள், வசூலிக்கப்பட்ட அபராத தொகை குறித்து பத்திரிகை செய்தி வழங்கப்பட்டு வந்தது. அவர் பணியிடம் மாறுதலாகி சென்ற பின், அபராத தொகை வசூலிக்கப்பட்டது குறித்து எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் எல்லை தெற்கு பகுதியில் விமான நிலையம், துரைப்பாக்கம், மடிப்பாக்கம் வரையிலும்; வடக்கு பகுதியில் புழல் வரையிலும்; மேற்கு பகுதியில் வானகரம் வரையிலும் உள்ளன.

இதில், கிண்டி வரை உள்ள காவல் நிலையங்களில் உள்ளவர்கள், அபராத தொகையை சைதாப்பேட்டை மற்றும் எழும்பூரில் உள்ள நீதிமன்றங்களில் ஆன்லைன் வாயிலாக செலுத்திவிடுவர். மேலும், டிஜிட்டல் முறையிலேயே அபராத தொகையை செலுத்துவர்.

ஆனால், பரங்கிமலை, விமான நிலையம், மடிப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களின் அபராத தொகையை, நடமாடும் நீதிமன்றத்தில் தான் செலுத்த வேண்டும். இதை பயன்படுத்தி கொண்டு, பல மாதங்களாக வசூலிக்கப்பட்ட அபராத தொகையை நிலைய எழுத்தர்கள் முறையாக செலுத்தாமல் சொந்த செலவிற்கும், வட்டிக்கு விட்டும் கல்லா கட்டி வந்துள்ளனர்.

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு எடுக்கும்போது பலரும் சிக்குவர். எனவே, நிலுவை தொகை செலுத்தும் வரை, புதிதாக அபராதம் விதிக்க தடை விதித்து, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

நடவடிக்கைக்கு பயந்து, ஒரு கோடி ரூபாய் வரை போலீசார் செலுத்தி உள்ளனர். மேலும், ஐந்து கோடி ரூபாய் வரை வரவு வைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

@quote@ இனி குளறுபடி நடக்காது!

''அபராதமாக வசூலித்த தொகை, கருவூலங்களில் செலுத்தப்படாமல் இருந்தது உண்மை தான். தற்போது, நிலுவையில் உள்ள அபராத தொகையை, அரசு கருவூலங்களில் சம்பந்தப்பட்டோர் செலுத்தி வருகின்றனர். நிலுவையில் உள்ள மொத்த தொகையும், அரசு கருவூலத்தில் செலுத்தும் வரை, முறைகேட்டில் சிக்கிய காவல் நிலையங்களில், வழக்குப்பதிவு செய்யக்கூடாது என, உத்தரவு பிறப்பித்துள்ளேன். இனி குளறுபடிகள் நடக்காது; முறையாக கண்காணிக்கப்படும்.


- அமல்ராஜ், சென்னை போலீஸ் கமிஷனர்.quote

Advertisement