பருவமழை பணிக்கான ரூ.42 கோடி டெண்டர்; ஒப்பந்ததாரர்களுடன் அதிகாரிகள் 'சிண்டிகேட்'
சென்னை: சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்கு, ஆன்லைன் டெண்டர் இன்று நடக்க உள்ள நிலையில், ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து அதிகாரிகள், 'சிண்டிகேட்' அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வங்கக்கடல் பகுதியை ஒட்டியுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் ஆகிய ஐந்து மாவட்டங்கள், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
35 சதவீதம்
பருவமழைக்காலத்தில் உருவாகும் புயல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. மழை நேரங்களில், மக்கள் வசிக்கும் பகுதிகள், சாலைகளில் தேங்கும் வெள்ளநீர் உடனுக்குடன் வெளியேறாவிட்டால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு அரசால், நீர்வளத்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிதியில், அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பாலாறு, வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பருவமழை காலம் முடியும்வரை, நீரோட்டத்தை தடுக்கும் திடகழிவுகள், செடி, கொடிகள் தொடர்ந்து அகற்றப்படும்.
அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சிக்காலங்களில், இப்பணிக்கு அதிகபட்சமாக 25 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டு இப்பணிக்கு அதிகபட்சமாக, 42 கோடி ரூபாயை த.வெ.க., அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், மொத்தமாக 202 இடங்களில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கிருஷ்ணா கால்வாய் திட்ட பகுதியில், 99 லட்சம் ரூபாயில், நான்கு பணிகள்; ஆரணியாறு வடிநிலப்பகுதியில், 14.60 கோடி ரூபாயில், 48 பணிகள்.
கீழ் பாலாறு வடிநிலப்பகுதியில், 10.60 கோடி ரூபாயில், 62 பணிகள்; கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில், 13.20 கோடி ரூபாயில், 55 பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
கடலுார் மாவட்டம், விருத்தாச்சலம் வெள்ளாறு வடிநிலப்பகுதி மற்றும் சிதம்பரம் கொள்ளிடம் ஆறு வடிநிலப்பகுதியில், மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில், 33 பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சிகளில், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் பரிந்துரைப்படி, ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் வழங்கப்படும். அதில், 20 முதல் 35 சதவீதம் வரை கமிஷன் பெறுவது வாடிக்கையாக இருந்து வந்தது.
நடவடிக்கை
த.வெ.க., ஆட்சியில் ஒளிவு மறைவின்றி வெளிப்படை தன்மையுடன், ஆன்லைன் முறையில் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய வேண்டும் என, முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். ஆனால், தொழில்நுட்ப வசதியில் உள்ள ஓட்டையை பயன்படுத்தியும், தங்களின் முன்பணி அனுபவத்தை பயன்படுத்தியும், இன்று நடக்க உள்ள ஆன்லைன் டெண்டரிலும், அதிகாரிகள், 'சிண்டிகேட்' அமைக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, ஆன்லைனில் பெறப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் சிலர் கூறியதாவது: பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கான டெண்டர்கள், நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் வாயிலாக வெளியிடப்பட்டு உள்ளது. ஆன்லைன் டெண்டர் இன்று திறக்கப்படுகிறது.
இரண்டு நாள் கழித்து, ஒப்பந்ததாரர்களை அழைத்து, குறைந்த டெண்டர் கோரியவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும். ஆனால், சென்னையை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் வாயிலாக, மற்ற ஒப்பந்ததாரர்கள் யாரும் டெண்டர் கேட்கக்கூடாது. அடுத்த பணிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மீறி டெண்டர் விண்ணப்பம் அளித்த ஒப்பந்ததாரரை தகுதி நீக்கம் செய்யவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த டெண்டர் ஆவணங்கள் அனைத்தும், இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை ஆய்வு செய்தால், அதில் முறைகேடு நடத்த முயற்சித்த தகவல் அம்பலமாகும். இவ்வாறு அவர்கள்கூறினர்.
இதெல்லாம் வழக்கமான பாணி தானே பாவிங்க. இப்படி கேவலமான அரசு அதிகாரிகள் அதிகார பிச்சை எனும் லஞ்ச ஊழலில் ஈடுபடாமல் இருக்கவே மாட்டாங்க.
அந்த அதிகாரிகளை இருப்பிடத்தில் இருந்து நல்ல தூரமாக தூக்கினால் அனுப்பி வைங்க!
அந்த சிண்டிகேட் அதிகாரிகளை ஒரு 20 வருடங்கள் சிறையில் அடைக்க வேண்டும். ஜாமீன் வழங்க கூடாது.
த.வெ.க அரசின் டெண்டர் திறமையைத்தான் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் கொடுக்கும் டெண்டரிலேயே தமிழக மக்கள் பார்த்து விட்டார்களே?மேலும்
-
கிர்கிஸ்தானில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கிறார் பிரதமர் மோடி
-
இன்று தேர்தல் நடந்தாலும் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு; கருத்துக்கணிப்பில் தகவல்
-
நேபாளத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 63 பேர் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
-
இக்கட்டான சூழ்நிலையில் உதவி; இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்
-
நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ஏரியின் பெயரை மாற்றினார் டிரம்ப்; கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு