மதுரை - துாத்துக்குடி இடையே தொழில் வழித்தடம் தேவை; தொழில்துறை கோரிக்கை
மதுரை: அருப்புக்கோட்டை வழியாக மதுரை - துாத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் மதுரை - துாத்துக்குடி வரை தொழில் வழித்தடமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்கின்றனர் தொழில்துறையினர்.
அவர்கள் கூறியதாவது:
மதுரை, திருப்பரங்குன்றம், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், மேலமருதுார், மீளவிட்டான் வழியாக 143.50 கி.மீ., துாரத்துக்கு துாத்துக்குடியை இணைக்கும் புதிய ரயில் பாதை திட்டம் 2011 - 12ல் அறிவிக்கப்பட்டு 2016ல் பணிகள் துவங்கின. துாத்துக்குடியில் உள்ள மீளவிட்டான், மேலமருதுார் இடையிலான 18 கி.மீ., பாதை 2022ல் முடிக்கப்பட்டது.
கடந்த 2025 ஜனவரியில் இத்திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவித்த நிலையில், மீண்டும் எடுத்து கொள்வதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள பகுதிக்கான ஆய்வு, வடிவமைப்பு, டெண்டர் தயாரிப்பு உள்ளிட்ட முன் கட்டுமான பணிகளையும் தெற்கு ரயில்வே தொடங்கி விட்டது.
இதை வெறும் ரயில் பயண திட்டமாக மட்டும் பார்க்காமல் மதுரை - துாத்துக்குடி தொழில் வழித்தடமாக மாற்ற வேண்டும் என்கின்றனர் தொழிற்துறையினர்.
அவர்கள் கூறியதாவது:
தென் மாவட்ட தொழில் மையங்களை நேரடியாக துாத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதனால், சரக்கு போக்குவரத்து, தொழில் முதலீடு, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிக்கும்.
தெற்கு ரயில்வேயின் மதுரை மண்டல தொழில் விபரங்களில் மதுரைக்கு முக்கிய துறைகளாக ஜவுளி, சிறு இயந்திர உற்பத்தி, வர்த்தகம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் தயாரிக்கப்படும் டெக்ஸ்டைல் சார்ந்த பொருட்கள் ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, கனடாவுக்கு ஏற்றுமதியாகின்றன.
எனவே, மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் பாதையை பயணிகள் ரயில் திட்டமாக பார்க்காமல் தொழில் மற்றும் சரக்கு வழித்தடமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். புதிய ரயில் பாதையுடன் இணைந்த தொழிற்பூங்காக்கள், போக்குவரத்து முனையம், டிரைபோர்ட் மற்றும் துறைமுக சரக்கு இணைப்பை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும்
-
காரியாபட்டி அரசு பெண்கள் பள்ளியில் ரோட்டோரத்தில் சைக்கிள் ஸ்டாண்ட்
-
இரவில் பஸ் வசதியின்றி கூடலுார் மக்கள் அவதி
-
திருப்பாலைக்குடியில் கடற்கரை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
-
சிவகங்கை, ராமநாதபுரத்தில் பால் உற்பத்தி பாதிப்பு பூட்டிக் கிடக்கும் பால்பண்ணை
-
கீழக்கரை மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
-
விழிப்புணர்வு ஊர்வலம்