சிவகங்கை, ராமநாதபுரத்தில் பால் உற்பத்தி பாதிப்பு: பூட்டிக் கிடக்கும் பால்பண்ணை  

சிவகங்கை:மாவட்டத்தில் பால் உற்பத்தி குறைந்த போதும், ஆவின் நிர்வாகம் பூத்களுக்கு ஒதுக்கும் பால் பாக்கெட்களை மக்களுக்கு விற்காமல், பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு சில ஏஜன்ட்கள் தனியாருக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி ஆவின் பாலகத்தின் கீழ் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 60 ஆயிரம் லிட்டர் வரை கொள்முதல் செய்கின்றனர். இவற்றை குளிரூட்டும் நிலையங்களில் வைத்து காரைக்குடியில் பாக்கெட்களாக நிரப்பி இரு மாவட்டங்களில் உள்ள 70 பால் பூத்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். பால் வரத்து குறைவாக இருந்தபோதிலும், விற்பனைக்கு பிற மாவட்டங்களில் இருந்து பாலை வாங்கி தினமும் 73 ஆயிரம் லிட்டர் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

அதே நேரம் பால் தட்டுப்பாடு எனக்கூறி பால் பூத்களுக்கு பால் பாக்கெட்களை வழங்காமல் புறக்கணிப்பதாக ஏஜன்ட்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரு சில ஏஜன்ட்கள் பால் பூத்களுக்கு வழங்கும் பால் பாக்கெட்களை மக்களுக்கு விற்பனை செய்யாமல் கூடுதல் விலைக்கு தனியாருக்கு விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. கூடுதல் விலைக்கு பால் பாக்கெட்களை விற்பனை செய்யும் ஏஜன்ட்கள் மீது ஆவின் பாலக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என புகார் தெரிவிக்கின்றனர். * பூட்டியே கிடக்கும் பால்பண்ணை: சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரையில் தலா ரூ.60 லட்சம் செலவில் கூட்டுறவு பால்பண்ணை துவக்கினர். இங்கு பால், தயிர், நெய், வெண்ணெய், பால்கோவா, பாதம்பால், பன்னீர், ஐஸ்கிரீம், நறுமண பால், பால் பவுடர், சாக்லெட், பாதாம் மிக்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக இம்மூன்று பால்பண்ணைகளிலும் உப பொருட்கள் விற்பனையின்றி பூட்டியே கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. பால் பூத்களுக்கு முறையாக பால் பாக்கெட்களை ஆவின் நிர்வாகம் வினியோகம் செய்யாததால், வாடிக்கையாளர்களுக்கு பால் பாக்கெட் விற்பனை செய்ய முடியாமல் பூத் ஏஜன்ட்கள் தவித்து வருகின்றனர். காரைக்குடி ஆவின் நிர்வாகம் தடையின்றி மக்களுக்கு பால் பூத்களில் பால் பாக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். * கோடை வெயிலால் பாதிப்பு: கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கோடை வெயில், ‛எல்- நினோ' பாதிப்பு காரணமாக நிலங்களில் பசும்புல் விளைச்சல் இன்றி போனதால், பால் மாடுகளுக்கு உரிய தீவனமின்றி பால் வரத்தும் குறைந்துவிட்டது. இதனால் ஆவினுக்கு பால் வரத்து குறைந்திருக்கும் என்றனர். ///

Advertisement