ரூ.1க்கு மக்களை தேடி உணவு; நங்கநல்லுாரில் திட்டம் துவக்கம்

மடிப்பாக்கம்: மகா பெரியவா அருள் அறக்கட்டளை சார்பில், நங்கநல்லுார் சுற்று வட்டார மக்களை தேடி சென்று, ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை மடிப்பாக்கம் கண்ணன்நகர், 5வது தெருவில் மகா பெரியவா சரணாலயத்தில், கடந்த மே, 30ம் தேதி, மகா பெரியவா அருள் அறக்கட்டளை சார்பில், ஒரு ரூபாய்க்கு அனைவருக்கும் மதிய உணவு எனும் திட்டம், ஆன்மிகவாதியான காயத்திரி ராஜகோபாலால் துவங்கப்பட்டது.

அதன் விரிவாக்கமாக, நங்கநல்லுார், அதன் சுற்று வட்டார பகுதி மக்களை தேடி சென்று, ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.

இதற்காக, அறக்கட்டளை சார்பில் வாகனம் வழங்கப்பட்டது.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உணவு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், காயத்திரி ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, தாமல் ராமகிருஷ்ணன், 'அன்னதான மகிமை' எனும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

ஒரு ரூபாய் உணவு திட்டம் குறித்து, மகா பெரியவா சரணாலய நிர்வாணி சவுமியா கூறுகையில், ''நங்கநல்லுார் அதன் சுற்று வட்டார பகுதிகளில், வியாழக்கிழமை தோறும் வேன் வாயிலாக சென்று, மதிய உணவு வழங்கப்படும். உணவு பெறுபவரிடம், ஒரு ரூபாய் மட்டும் பெறப்படும். முதல் கட்டமாக, 108 பேருக்கு உணவு வழங்கப்படும். வரும் நாட்களில் இது அதிகரிக்கப்படும்,'' என்றார்.

Advertisement