ஆட்கொல்லி புலியை பிடிக்க 160 தானியங்கி கேமராக்கள்

கூடலூர்: கூடலுாரில், ஆட்கொல்லி புலியை பிடிக்க, 160 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி லாரஸ்டன் பகுதியில், சில நாட்களுக்கு முன், பாலகிருஷ்ணன், 60, ரவிச்சந்திரன், 56 ஆகியோரை புலி தாக்கி கொன்றது. கூடலுார் டி.எப்.ஓ., தேவராஜ் தலைமையில், கால்நடை மருத்துவர்கள் உட்பட, 100க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், புலியை பிடிக்கும் பணியில் கடந்த 21ம் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, 110 இடங்களில் தானியங்கி கேமராக்கள், 12 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளன. மழை, மேகமூட்டம் என காலநிலை மாற்றத்தால், புலியை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டாலும், வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று, சூண்டி, சூண்டி மலை, பாரம், லாரஸ்டன் பகுதியில் புலியை கண்காணிக்க, சத்தியமங்கலத்தில் இருந்து கூடுதலாக கொண்டுவரப்பட்ட, 50 தானியங்கி கேமராக்களும் பொருத்தப்பட்டன.

வனத்துறையினர் கூறுகையில், 'கூடலுார், முதுமலை மட்டுமின்றி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளா முத்தங்கா வன சரணாலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டு, 15 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 160 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்கள் வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்' என்றனர்.

Advertisement