போட்டி ஒரு நாள் பயணம் பல நாள்

திருப்பூர்: இன்று தேசிய விளையாட்டு தினம்(ஆக. 29). ஒரு போட்டி சில மணி நேரத்தில் முடிந்துவிடலாம்; ஆனால் அந்த களத்தில் நிற்கும் ஒரு வீரரின் பயணம் பல நாட்கள், பல ஆண்டுகள் நீளக்கூடியது. பள்ளி மைதானத்தில் தொடங்கும் ஒரு வாய்ப்பு, சரியான பயிற்சி மற்றும் ஊக்கத்துடன் மாநிலம், தேசியம், வேலைவாய்ப்பு வரை அழைத்துச் செல்லும். திருப்பூர் மாவட்டத்தில் வீரர்களை உருவாக்கும் விளையாட்டு பயணங்களும் இதற்கு சாட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் நடந்து வரும் குறுமைய விளையாட்டு போட்டிகளில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டு மாணவ, மாணவியரின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. தடகளம், கபடி, வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வத்துடன் களம் காணும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. உடுமலை குறுமையத்தில் மட்டும் 1,300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் கூறுகையில், “அதிக மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்கும்போதுதான், அவர்களுக்குள் இருக்கும் திறமை வெளிப்படும். போட்டிகள் மூலம் தங்களது திறன், நிலையை அறிந்து அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும்,” என்றார்.

அவ்வகையில், பள்ளி பருவத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அவிநாசியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேசிய தடகள போட்டிக்கும், திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விளையாட்டு ஒதுக்கீட்டில் ராணுவத்துக்கும் தேர்வாகி உள்ளனர்.

Advertisement