மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்தில் அன்னதானம்: உணவுப்பாதுகாப்புத்துறை சான்றிதழ் கட்டாயம்

14

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப். 17 ல் நடக்கஉள்ள நிலையில், பக்தர்களுக்காக அன்னதானம், நீர்மோர், பிற உணவுப்பொருட்களை வழங்குவோர் ஆன்லைனில் பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும் என உணவுப்பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோயில்களில் அன்னதானம், பிரசாதங்கள் தயாரித்து வழங்குவதற்கான பிரத்யேக 'போக்' சான்றிதழை மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கான 'போக்' சான்றிதழ் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

யாகசாலை, கும்பாபிஷேகத்தின் போது மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள், ஆவணி மூலவீதிகள், மாரட் வீதிகளில் பக்தர்கள் இலவசமாக அன்னதானம், பிரசாதம், நீர்மோர், இனிப்பு, சர்பத், குளிர்பானம், தண்ணீர் பாட்டில்கள் வழங்குவர். இவர்கள் உணவுப்பாதுகாப்புத்துறையின் கீழ் foscos.fssai.gov.in இணையதளத்தில் ஆன்லைன் முறையில் ரூ.100 கட்டணம் செலுத்தி பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என்கிறார் மதுரை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராமபாண்டியன்.

அவர் கூறியதாவது:
பக்தர்களுக்கு வழங்கும் உணவுப்பொருட்களில் செயற்கை சாயங்கள் பயன்படுத்தக்கூடாது. அரசால் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பை, பிளாஸ்டிக் கப்களை தவிர்க்க வேண்டும். உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வாங்கும் போது அவற்றின் தயாரிப்பு, காலாவதி தேதிகளை சரிபார்க்க வேண்டும்.

ஒருமுறை சான்றிதழ் பெற்றால் ஓராண்டு வரை செல்லும். ஏப்ரலில் நடந்த சித்திரைத் திருவிழாவின் போது அழகர்கோவில், மதுரை உள்ளிட்ட இடங்களில் அன்னதானம், பிற உணவுப்பொருட்கள் தானம் வழங்கிய 626 பேர் பதிவுச் சான்றிதழ் பெற்றுள்ளனர். இது ஓராண்டு வரை செல்லும் என்பதால் அந்த சான்றிதழ் உள்ளவர்கள் அன்னதானம் வழங்க நினைத்தால் மீண்டும் சரிபார்க்க வேண்டும். தற்காலிமாக உணவுக்கடை, குளிர்பான கடைகள் அமைப்பவர்களும் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என்றார்.

உணவு தொடர்பான புகார்களுக்கு 94440 42322 வாட்ஸ்ஆப் எண்ணில் பதிவு செய்யலாம். பதிவெண் பெறுவதில் சந்தேகம் இருந்தால் 0452 - 264 0036 ல் தொடர்பு கொள்ளலாம்.

@block_B@

வசதிகளை நிறைவேற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி



மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

காரைக்குடி வழக்கறிஞர் மணிகண்டன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயிலில் ரூ.50 தரிசன கட்டணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். வி.ஐ.பி.,தரிசனத்தை முறைப்படுத்த வேண்டும் என கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு பிறப்பித்த உத்தரவு: வருவாய்த்துறை, மாநகராட்சி, காவல்துறை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் இணைந்து வசதிகளை நிறைவேற்ற கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரையை சுற்றிலும் எந்த கோயிலில் திருவிழாக்கள் நடந்தாலும், இதுபோல் வழக்கு தாக்கல் செய்வதை மனுதாரர் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதுபோல் மனுதாரர் ஏற்கனவே தாக்கல் செய்த ஒரு வழக்கில் அபராதம் விதிப்பதை இந்நீதிமன்றம் தவிர்த்தது. அதுபோல் நாங்களும் அபராதம் விதிப்பதை தவிர்க்கிறோம். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.block_B

Advertisement