நேபாளத்தில் மீட்பு பணி; அரசிடம் அனுமதி கோரும் ஈஷா யோகா

7



புதுடில்லி: ஆன்மிக சுற்றுலா சென்ற இந்தியர்கள் நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிக்கு தன்னை அனுமதிக்குமாறு ஈஷா யோகா மையம் நிறுவனர் சத்குரு நேபாள அரசிடம் அனுமதி கேட்டுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில்; கியிரோங்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் தங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேரை இழந்த வேதனையில் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளோம். வெள்ளத்திற்குப் பிறகு அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் என்னையும், சில தன்னார்வலர்களையும் கியிரோங்கிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.

மீட்புப் பணிகளுக்கு எந்தவிதத்திலும் இடையூறாக இருக்க மாட்டோம். குடும்பத்தினருக்கு உதவவும், அடையாளங்களைக் கண்டறிய உதவவுமே அங்கு செல்ல விரும்புகிறோம். நாங்கள் இப்போது, திபெத் எல்லையில் உள்ள சாகா நகரில் உள்ளோம். எங்களை கியிரோங் செல்வதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.




17 நாடுகளைச் சேர்ந்தவர்கள்..





சத்குரு கூறியதாவது; நேபாள வெள்ளத்தில் 484 பேர் காணாமல் போயுள்ளதாக இந்தியச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நேபாளம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இன்று காலை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் செல்ல முயன்றோம். ஆனால், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாலும், சாலைகள் மூடப்பட்டுள்ளதாலும் அங்கு செல்ல முடியவில்லை.

மலையேற்றத்திலிருந்து திரும்பிய எங்களின் குழுவைச் சேர்ந்த 80 பேர் சிக்கியுள்ளனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 22 பேர், கனடாவைச் சேர்ந்த 12 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 11 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 9 பேர், ஜெர்மனியைச் சேர்ந்த 4 பேர், பிரான்ஸ், நேபாளத்தைச் சேர்ந்த தலா 3 பேர், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த தலா 2 பேர், பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லித்துவேனியா, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.

மொத்தமாக 80 பேரில் 34 ஆண்களும், 46 பெண்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் விடுதிகளில் முகாமிட்டிருந்த சில தன்னார்வலர்கள் உள்ளனர். இதுவரையில் எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை. ஆனால், நிலைமையை பார்க்கும் போது, மிகவும் மோசமாக இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement