தமிழர்கள் மீட்க நேபாளம் விரைகிறது தமிழக குழு

9

சென்னை: நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்டு அழைத்து வருவதற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு ஒன்று காத்மாண்டு செல்கிறது. மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் டில்லி செல்கின்றனர்.


திபெத்தில் நேற்று பிரமாண்ட பனிப்பாறை உருகி, அங்குள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவு நீர் நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் கலந்து, திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், வழியில் இருந்த பாலங்கள், கட்டடங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த திடீர் பேரழிவில், 359 பேர் பலியாகினர். 133 இந்தியர்கள் உட்பட 1,500 பேர் மாயமாகியுள்ளனர்.



திடீர் வெள்ளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, தலைமைச்செயலர் சாய்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் மணிவாசன், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், பொதுத்துறை செயலாளர் சுந்தரவல்லி, தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இயக்குனர் சதீஸ்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில், புதுடில்லி தமிழ்நாடு இல்ல உள்ளூறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையில் ஒரு குழு நேபாளம் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் தொடர்பு கொள்ள முடியாதவர்களின் நிலையினை கண்டறிந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி, மருத்துவ உதவிகளை வழங்கவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத், ஐஏஎஸ் அதிகாரி சதீஷ் டில்லியில்உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு மீட்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு, மீட்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும்உளவியல் ஆலோசனைகளை மருத்துவ குழுவினர் வாயிலாக வழங்கவும், பத்திரமாக தமிழகத்திற்கு அழைத்து வரவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

49 பேர் மாயம்



இதனிடையே சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 49 பேர் குறித்த தகவல்களை பெறவும், மீட்புப்பணிகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.

Advertisement