தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள்; தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

1

சென்னை; ''தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில், தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள் செயல்படுகின்றன,'' என, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.

தமிழக தேர்தல் கமிஷன் சார்பில், 'ஜனநாயகத்தை காப்போம்; ஜனநாயகத்தை வழிநடத்துவோம்' என்ற கருப்பொருளில் சென்னையில் மண்டல மாநாடு நடந்தது. முதலாவதாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். அப்போது, மாணவர்கள், ஆசிரியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுப்பதிவுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. வேறு எந்த தொடர்பும் இல்லாத வகையில், இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் எந்தவித அச்சமும் இல்லாமல் ஓட்டளிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு எனும், ஏ.ஐ., தொழில் நுட்பத்தை, ஓட்டுப்பதிவில் செயல்படுத்த முடியாது.

'பயோமெட்ரிக்' முறையை செயல்படுத்துவதிலும், நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எதிர்காலத்தில் வேண்டுமானால், இந்த நடைமுறைகளை பயன்படுத்தலாம். ஒரு வேட்பாளரின் சொத்து கணக்கு வேறுபாடுகள் குறித்து, தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. அவை, சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையிலான தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள் மிகவும் இன்றியமையாதவை,'' என்றார்.

Advertisement