மத நம்பிக்கையில் முடிவளர்க்கும் கைதி அகற்ற வற்புறுத்த தடை கோரி வழக்கு விதிகளை பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: -திருநெல்வேலி மத்திய சிறையிலுள்ள ஒரு கைதி மத நோக்கங்களுக்காக தலைமுடி வளர்ப்பதை வெட்டுமாறு நிர்வாகம் வற்புறுத்தக்கூடாது என தாக்கலான வழக்கில்,' வற்புறுத்தவில்லை,' என அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. சிறை விதிகளை அதிகாரிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் கீரன்குளம் பேபி கமலம் தாக்கல் செய்த மனு:

எனது மகன் ஜேம்ஸ் செல்லத்துரை, விசாரணை கைதியாக திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ளார். மத நோக்கங்களுக்காக அவர் தலைமுடியை வளர்க்கிறார். தலைமுடியை வெட்டுமாறு சிறைத்துறை நிர்வாகம் வற்புறுத்துகிறது. இது மத நம்பிக்கைக்கு எதிரானது; வற்புறுத்தக்கூடாது என சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, பி.முருகேசன் அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மணீந்தர்நாத் ஆஜரானார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ்: கைதிகளின் தலைமுடி வெட்டப்படுவது சிறைச்சாலை விதிகள்படி மேற்கொள்ளப்படுகிறது. சுகாதாரத்தை பேணும் நோக்கில் மருத்துவ காரணங்களுக்காக தலைமுடி அல்லது நகங்களை வெட்ட வேண்டிய அவசியம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே, கைதிகள் அவ்வாறு செய்யுமாறு சிறை நிர்வாகம் அறிவுறுத்தும். அத்தகைய ஒழுங்குமுறையை பின்பற்ற கைதி மறுக்கும் பட்சத்தில் அது சிறைச்சாலைகள் சட்டப்பிரிவின் கீழ் குற்றமாகும்.

மனுதாரரின் மகனை தலைமுடியை வெட்டுமாறு வற்புறுத்தவில்லை. தலைமுடி வளர்த்திருப்பது மற்ற கைதிகளின் சுகாதாரத்தை பாதிக்கும் நிலை ஏற்பட்டால் சிறை விதிகளின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், 'சிறை விதிகளை அதிகாரிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்,' என உத்தரவிட்டு பைசல் செய்தனர்.

Advertisement