திருவிழாவில் நடந்த தகராறை தட்டிக்கேட்ட வக்கீலுக்கு வெட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, கோவில் திருவிழாவில் நடந்த தகராறை தட்டிக்கேட்ட, 27 வயது வழக்கறிஞரை, அரிவாளால் வெட்டிய மூவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கமல், 27. வழக்கறிஞர். கடந்த 2ம் தேதி, புன்னப்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில், ஆடி மாத தீமிதி திருவிழா நடந்தது.

அப்போது நடந்த சுவாமி ஊர்வலத்தில், தவா என்கிற தமிழ்ச்செல்வன், 20, என்பவர், விக்னேஷ், 26, என்பவரை தாக்கியுள்ளார். இதை, கமல் தட்டிக்கேட்டுள்ளார்.

இதுகுறித்து, விக்னேஷ் கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் ஆஜராகக் கூடாது என, வழக்கறிஞர் கமலை தமிழ்ச்செல்வன் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை, தனது தந்தையுடன் வயலுக்கு சென்று கொண்டிருந்த கமலை வழிமறித்த தமிழ்ச்செல்வன், தன் கூட்டாளிகளான ஈஸ்வர், 23, சக்திவேல், 22, ஆகியோருடன் சேர்ந்து, வாக்குவாதம் செய்து, சரமாரியாக வெட்டினர்.

இதையடுத்து, பலத்த காயமடைந்த கமலை, அருகிலிருந்தோர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதன்பின், கமல் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த புல்லரம்பாக்கம் போலீசார், தமிழ்செல்வன், ஈஸ்வர், சக்திவேல் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement