'கற்கும் ஆர்வமும் முயற்சியும் இருந்தாலே போதும் கலைஞராகலாம்!'
கல்லுாரி மாணவி, பரதநாட்டிய ஆசிரியர், நாடக கலைஞர் என பல்வேறு தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும், புதுச்சேரியைச் சேர்ந்த மாதவி:
என் அம்மா, கேரள மாநிலம், தலச்சேரியைச் சேர்ந்தவர். அப்பா, புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2004ல் புதுச்சேரியில் குடியேறினோம். எனக்கு 6 வயதானபோது, அப்பா ஒரு விபத்தில் இறந்து விட்டார். அதன்பின், குடும்ப பொறுப்பை அம்மா பார்த்துக் கொண்டார்.
சிறு வயது முதலே நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை கவனித்த அம்மா, என்னை பரதநாட்டிய வகுப்பில் சேர்த்து விட்டார். அதேபோன்று, 10 வயதில் பாட்டு கற்றுக் கொள்ளவும் அனுப்பி வைத்தார்.
கடந்த 2014ல் என் பரதநாட்டிய அரங்கேற்றமும் அம்மாவால் நடந்தது. படிப்பது மட்டுமல்லாமல், கல்லுாரியில் நாடக பயிற்சி, கச்சேரிக்கான பயிற்சி என எல்லா வேலைகளையும் செய்கிறேன். என் பரதநாட்டிய ஆசிரியரிடம் உதவி ஆசிரியராகவும் உள்ளேன்.
என்னிடம் நடனம் பயிலும் மாணவர்கள் பலரும், 'உங்களால் எப்படி இவ்வளவு வேலைகளை செய்ய முடிகிறது' என ஆச்சரியமாக கேட்கின்றனர். 'நேர மேலாண்மையை திட்டமிட்டு கொண்டால், அனைவருக்கும் இது சாத்தியம்' என்று கூறுவேன். கல்லுாரியில் இளங்கலை படித்தபோது எட்டு நண்பர்களுடன் இணைந்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், 'பீட் - ரூட்' என்ற இசைக்குழுவை உருவாக்கினேன்.
முதலில் சிறு சிறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். அதற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு, எங்களுக்கு நிறைய நம்பிக்கைகளை கொடுத்தது. அதன்பின், தொடர்ந்து பல மேடை நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பித்தோம். இப்போது புதுச்சேரியில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில், எங்கள் இசைக்குழுவை காணலாம். பல்கலைக்கழகத்திலும் எங்கள் குழுவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
கலை என்பது ஒரு கல்லுாரி பாடமாக மட்டுமல்ல, வாழ்க்கை முறையாகவும் மாறி இருக்கிறது. 'கலை என்பது மேடையில் நிற்பது, நடிப்பது, பாடுவது மட்டும் இல்லை. அது பொறுமையையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கிறது. அது பிறவியிலேயே கிடைக்கும் வரம்' என்று பலரும் கூறுகின்றனர்.
ஆனால், அந்த கருத்தில் இருந்து நான் சிறிது மாறுபடுகிறேன். கலையை தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், கலை மீது ஆசையும் இருந்தால் போதும்; யார் வேண்டுமானாலும் மிகப் பெரிய கலைஞராக மாறலாம்; தங்களுக்கான இடத்தையும் உருவாக்க முடியும்.
ஆர்வம், விடாமுயற்சி, ஒழுக்கம் எல்லாம் தான், ஒரு கலைஞரின் வளர்ச்சிக்கு அடித்தளங்களாக இருக்கின்றன. அதை, எனக்கு கிடைத்த அனுபவங்கள் உணர்த்தி இருக்கின்றன. ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்த என் வாழ்க்கையே அதற்கு எடுத்துக்காட்டு!
***
மேலும்
-
தொடரை வென்றது இங்கிலாந்து: பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வி
-
'கவுன்டி' அணியில் அகிப் நபி: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக
-
கிழக்கு மண்டல அணி அபாரம்: துலீப் டிராபி அரையிறுதியில்
-
இந்திய அணியில் இடம்: மனம் திறக்கிறார் சூர்யகுமார்
-
ஜெர்மனி மீண்டும் சாம்பியன்: உலக கோப்பை ஹாக்கியில் கலக்கல்
-
பெடரருக்கு கவுரவம்: 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம்