சிறுபான்மையினர் சார்பு அரசு ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
திருப்பூர்: ''ஓட்டு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினருக்கு சலுகைகள் அறிவிப்பது, ஒரு தலைபட்சமாக அரசு செயல்படுவது போல் உள்ளது. தமிழக முதல்வர் இதை உணர வேண்டும்,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சட்டசபை மானியக் கோரிக்கை விவாதத்தில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான், சிறுபான்மை இனத்தவருக்கு சலுகைகளை அறிவித்துள்ளார். அதில், இஸ்லாமிய மாணவியரின் கல்லுாரி கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும்; இதற்காக, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அனைத்து மதத்தினரும் அரசுக்கு வரி செலுத்தும் நிலையில், ஒரு மதத்தினருக்கு மட்டும் ஏன் சலுகை வழங்க வேண்டும்? பெரும்பான்மை ஹிந்துக்களிலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழை மாணவர்கள் உள்ளனர். இந்த அறிவிப்பு பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.
மேலும், வக்பு வாரிய சொத்துகள் மற்றும் கிறிஸ்துவ சர்ச் சொத்துகளை பாதுகாக்கவும், கட்டடங்கள் அமைக்கவும், 100 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற மதத்தினரின் வழிபாட்டு தலங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நிதி வருகிறது; அவற்றின் வருவாயும் அவர்களிடமே உள்ளது. அதில் அரசு தலையிட முடியாது.
ஆனால், ஹிந்து கோவில்களின் சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஏராளமான கோவில்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன. அவற்றை அரசு கண்டுகொள்வதில்லை. கோவில் வருமானங்களை மட்டும் அரசு எடுத்துக்கொள்கிறது.
இச்சூழலில், சிறுபான்மை வழிபாட்டு தலங்களுக்கு நிதி வழங்குவது ஏற்புடையதல்ல.
தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் பல நுாறு கோடி ரூபாய் உள்ள நிலையில், புதிய கட்டடம் கட்ட, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சலுகைகள் வழங்கப்படுவதுடன், இந்த நிதி ஒதுக்கீடுகளும் ஒரு தலைபட்சமான நடவடிக்கையாகும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், மதத்தின் பெயரால் சலுகை வழங்க தடை செய்கிறது. இது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல். இத்தகைய ஓட்டு வங்கி அரசியல், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.
அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும். தற்போதைய அரசின் செயல்பாடுகள், சிறுபான்மையினருக்கு சார்பான அரசு என்பது போல் உள்ளது. முதல்வர் விஜய் இதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.